அழகான வாழ்க்கை ஆனந்தமாய் - சர்நா

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

தடமிருக்கும், இடமிருக்கும்
போய்வரத்தான் மனமிருக்கும்
இருட்டு,மழை நோக்கி
வெந்து நொந்த வருத்தத்தை

தரணியையே சுருக்கியதில்
பறக்கிறதே பயணங்களாய்
அழகான வாழ்க்கை ஆனந்தமாய்
ஆனதல்லவோ போக்குவரத்தால்.....

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

உறங்கியவன் அசையவில்லை
அடிபட்டவன் எழவில்லை
கைமீறிய உயிர்களைத்
தடுத்துதவ வழியில்லை.

இயங்கவைத்த தவவரமாய்
தள்ளிப்போட்ட தலைமுறையாய்
அழகான வாழ்க்கை ஆனந்தமாய்
ஆனதல்லவோ மருத்துவத்தால்...

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

மண்வளம் மலர்ந்திருக்க
மதியாள்கை காய்ந்திருக்க
மூடத்தனம் பிழைத்திருக்க
மனமதையும் மறைத்திருக்க

காடு மேடு நாடெல்லாம்
அறிவோளிக்கும் கதிரவனாய்
அழகான வாழ்க்கை ஆனந்தமாய்
ஆனதல்லவோ கல்வியால்...

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

படியிறங்கிச் சென்றவரோ
வீடு சேரும்வரை
உதறிய நெஞ்சத்தை
பதறாது லேசாக்கி

வேண்டும்போது கதைக்கிறாயே
காணொளியிலும் நெகிழ்கிறாயே
அழகான வாழ்க்கை ஆனந்தமாய்
ஆனதல்லவோ கைபேசியால்...

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

எதனின் செயலறியவும்
எதையும் கூர்ந்தறியவும்
வாழ்வைத் தொலைத்தவரை
வரலாறு தொலைத்து நிற்க

எல்லாம் விரல் நுனியில்-உன்
வரலாறும் நிதம் வலையில்
அழகான வாழ்க்கை ஆனந்தமாய்
ஆனதல்லவோ இணையத்தால்......

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

தேவைகளைப் பகுத்து வகுத்து
ஆபத்தைத் தளர்த்தி நகர்த்தி
அன்பதனை இறைத்து நிறைத்து
இயங்க இயங்க நிறைவாவாய்.

குறையில்லா நிறையுமுண்டோ?
இதுவரை சரித்திரத்தில்
இவ்வாழ்வு யார்க்குமுண்டோ?
அழகான வாழ்க்கை ஆனந்தமாய்
ஆனதல்லவோ இன்றியல்பால்...

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

எழுதியவர் : சர்நா (26-Aug-14, 7:32 pm)
பார்வை : 137

மேலே