அழகான வாழ்க்கை ஆனந்தமாய்

அவள்
ஊமையென்றுதான்
எண்ணினேன்...
கண்களால் என்னிடம்
பேசியபோது......

தூண்டிலில்தான் மீன்
அகப்படும்...
இன்றோ மீன்போன்ற
அவள் கண்களில்
தூண்டிலாக மாட்டிக்கொண்டேன்.....

என்னவொரு அதிசயம்
பகலில் இருநிலவுகள்
அவளது இமைகளுக்குள்.....

இதயம்நின்ற பின்னரும்
உண்டு,உறங்கமுடியும்
என்பது
அவள் வந்த பின்னரே
கண்டுகொண்டேன்...

அவளது மனதில்
நான் சிறைபட்ட்டது எப்படி
அவளது மழலை சிரிப்புதான்
காரணமா?

இரத்தமின்றி
மாற்று அறுவைசிகிச்சை
முடிமா?
நம்மால் முடிந்ததே
அவளது இதயம் எனக்குள்...

எனக்காக அவள்
முதல்முறையாக செய்த சமையல்
அமிர்தமடி எனக்கு
அவள் செவ்விதழ்கள் ஊட்டியதால்...

கோபத்தில் சிகரத்தைவிட
உயரமாயிருந்தாள்
இன்று பொறுமையில் பூமியும்
உனது காலடியில்தானடி....

உச்சந்தலையில்
நான்பதித்த முதல்முத்தம்
காதலிக்கு மனைவியென்ற
பதவி உயர்வுகிடைத்ததே.....

இருவீட்டாரின் அனுமதியோடு
பதிவுத்திருமணம் செய்துகொண்டது
எனக்கு எளிமை பிடிக்கும்
என்பதற்காகவா?

அந்திமாலையில்
மயங்கிவிழுந்தபோது
என்னுயிரே நின்றுபோனது..
எழுந்தபின்னரே அறிந்தேன்
என்னுயிரை சுமக்கிறாயென்று....

உன் மடியில் நம் குழந்தை
என் மடியில்
குழந்தையை சுமக்கும் குழந்தை..

என்னை உன்னிரத்தில்
காண்கிறேன் குழந்தையாக
உன் அன்பில்வளரும் இரு
குழந்தைகளானோம் நாங்கள்.....

எனதுவாழ்க்கையில்
அடுத்தடுத்து
பிரச்சனைகள் பிரசவித்தபோது
தாயைப்போல் என்கையைப்பற்றி
வெற்றிப்பாதையில் நடந்தாயே....

மூன்றாவது காலூன்றி
நடக்கும்போது
உன்முத்தம் ஒன்றுமட்டும்
யுத்தம் செயும்சக்தியை
அளிக்கிறதே.....

பற்கள் அரும்பாத
இளமையில் அன்னைமடியில்
உறங்கினேன்...
பற்கள் விழுந்த
முதுமையில் மனைவிமடியில்
உறங்குகிறேன்...

பார்வை மங்கியபோது
என்னவள் அன்பைமட்டுமே
தெளிவாக காணமுடிந்தது...

என்னை பெற்றவளும்
இவ்வுலகில் இன்றில்லை
நான் பெற்றவனும்
என்னை கவனிக்காதபோது
என்னை குழந்தைபோல
பார்த்துக்கொள்கிறாயே.......

தோல்கள் சுருங்கியபின்னரும்
தோள்சாய என் தோழி
இருப்பதால்தான் என்னவோ
தோல்வியைகூட நான்
கண்டதில்லை......

தாய் மனைவி
தோழி காதலியாக
என்னுடன் இருந்தவள்
சுமங்கலியாக என்னை
விட்டுச்சென்றுவிட்டால்......

என்னைப்பிரிந்து
ஒரு நொடிகூட வாழாதவள்
ஒருநொடிக்கு முன்னரே
சுமங்கலியாகிவிட்டாள்....

நீ சென்ற மறுநொடி
உன்மடியில்
என்னுயிர் போனதடி
மறுபிறவியில் உன்னை
நானும் காதலிக்கவேண்டும்
உன்னைப்போல்.....

இதைப்போன்ற
அழகான காதலை
உனக்குகொடுக்கும் அந்த
அழகான வாழ்வே ஆனந்தமாய்
எனக்கு அமையும்....

எழுதியவர் : கவிராம் (27-Aug-14, 9:15 pm)
பார்வை : 368

மேலே