யானை முகத்தோனே

ஆற்றங் கரையில் அரசம ரத்தடியில்
வீற்றிருக்கும் வள்ளல் விநாயகா - போற்றிடுவேன்
ஏற்றமிகு வாழ்வை எமக்கருள்வாய் ,வற்றாத
ஊற்றா யளிப்பாய் வரம் .
மஞ்சளினால் செய்தாலும் மண்ணால் பிடித்தாலும்
தஞ்சமென வந்தோரைத் தாங்கிடுவான் - கெஞ்சியே
வஞ்சமிலா நெஞ்சோடு வாழ்த்தி வணங்கிட
சஞ்சலம் தீர்த்திடு வான் .
முக்கண்ணன் மைந்தனே முன்னவனே வந்திடுவாய்
முக்கனியும் சுண்டலும் மோதகமும் -பக்தியுடன்
யான்படைத்தேன் ஏற்றுக்கொள், யானை முகத்தோனே
தேன்தமிழ் மூன்றும்நீ தா .
தும்பிக்கை யானே துயர்கள் களைந்திடுவாய்
நம்பிவேண்ட நாளும் நலமருள்வாய் - உம்பர்கள்
கும்பிடும் நாயகா ! குன்றுதோறும் வீற்றிருக்கும்
தம்பிக் கருளிய வா . .