இன்னொரு தாயாய்
 
 
            	    
                தொலைக்காட்சி
பார்த்துக்கொண்டே 
சாவகாசமாய் 
வெங்காயம் 
நான் நறுக்க .........
அடுப்படி 
அவசரங்களோடு 
அங்கிருந்தே 
நீ
கத்தவேண்டும் !
=======================
உன் 
தோள்தொட்டு 
நான் பின்னால் அமர 
கம்பீரப் புன்னகையுடன் 
நீ 
ஸ்கூட்டியோட்டி
வரவேண்டும் !
=======================
என் 
வங்கிக்கணக்குக்
கடவுச்சொல்லை 
நான் மறந்து 
தவிக்கும்போது 
செல்லமாய் 
என் தலைகுட்டி 
நீ வந்து 
உதவவேண்டும் !
=======================
மேலதிகாரியிடம் 
திட்டுவாங்கி 
இருண்ட முகத்துடன் 
நான் வர 
உன் மார்போடு 
எனை அணைத்து
ஆறுதல் கதைகள் 
நீ
சொல்லவேண்டும் !
=======================
உன்னிடம் 
சண்டை போட்ட 
குற்றவுணர்வில் 
டைரியில் 
நானெழுதிய
கவிதையின் மீது 
காய்ந்த 
உன் கண்ணீர்த்துளிகள் 
நான் காணவேண்டும் ! 
=======================
உன் 
அலைபேசிக்கு வந்த 
அனாமதேயக் குறுஞ்செய்தியை 
என்னிடமே காட்டி
நீ
வெள்ளந்தியாய்ச் 
சிரிக்க வேண்டும் ! 
=======================
இன்று 
மழை வருமென்று 
நீயும் 
இன்று 
மழை வராதென்று 
நானும் 
' பெட் ' கட்டி விளையாடி 
அதில் நீ
ஜெயித்துவிட வேண்டும் !
=======================
என்னுள் இருக்கும்
கொஞ்சம் பெண்மையை 
உன்னுள் இருக்கும் 
கொஞ்சம் ஆண்மை 
படுக்கையில் 
வன்புணர்வு 
செய்ய வேண்டும் !
=======================
உனக்கு முன்பு 
உச்சம் எய்த 
குற்றவுணர்வில் 
தலை கவிழ்ந்து 
நான் கிடக்க .......
ஆறுதலாய் 
என் தலைகோதி 
என் நெற்றியில் 
நீ
முத்தமிடவேண்டும் ! 
=======================
என் 
செல்லத் தொப்பையைக் 
காரணங்காட்டி 
இரவு உணவுக்கு
இனி 
இரண்டு இட்டிலி
இரண்டு முத்தம் 
என 
எனக்கான 
டயட் மெனு 
நீ 
தயாரிக்க வேண்டும் !
=======================
புறப்படப் போகும் 
புகைவண்டியின் 
கடைசிப் பெட்டி 
ஏறிவிட ,
நம் தாமதங்களைப் 
புலம்பியபடியே 
என்னை 
இழுத்துக்கொண்டு
நீ
ஓடவேண்டும் !
=======================
நம் 
செல்ல மகளின் 
ப்ராக்ரஸ் கார்டில் 
உன் அனுமதியின்றி 
நான் 
கையெழுத்துப் போட்டதற்கு 
என்னிடம் சண்டை போட்டு 
நீ
ஒருவாரம் 
பேசாமல் இருக்கவேண்டும் !
===========================
என் வயோதிகத்தின் 
மரணத் தருணத்தில்
நம் 
பழைய கதைகள் 
நீ சொல்ல
உன் மடியில்படுத்தபடி 
கேட்டுக்கொண்டே 
துளித்துளியாய் 
துளித்துளியாய் 
நான் சாகவேண்டும் !
=======================
இத்தனையும் 
நடக்க 
இரண்டாம் தாயாய்
இல்லையில்லை 
இன்னொரு தாயாய் 
நீயெனக்கு 
வாய்க்கவேண்டும் ! 
=====================
- குருச்சந்திரன்
 
                     
	    
                
