ஊடலைத் தொடரும் மௌனம்

நேற்றுன்னைக்
காயப்படுத்தித் திரும்புகையில்
வார்த்தைகளில் அடித்தது..
இரத்த வாடை!
காயத்திலிருந்து வழிந்த சீழ்
காயம் தரும் கத்தியானது!
அடங்க மறுக்கும் ஆணவத்தோடு
மோதிக் கொண்டதில்
காதலெங்கும் சிராய்ப்புகள்!
மரண வீட்டில்
புதுமுகத்தைப் போல
கவனிப்பாரற்றுக் கிடக்கிறது..
கேட்கப்பட்ட மன்னிப்பு!
துக்கத்தின் கணத்தைத்
தொண்டையிலும் மனதிலும்
உணர முடிகிற தருணத்தில்
அச்சுறுத்தத் தொடங்கும்..
அகாலத் தனிமை!
பின்வரும் நாட்களில்
நிழற்படங்களென விரியும்
நடந்ததும் கடந்ததும்!
பற்றி எரியும்
நிமிடங்களுக்கு மத்தியில்
சிரமப்பட்டுத் தேடப்படும்..
சிரிப்பதற்கான சந்தர்ப்பங்கள்!
இருந்தாலும் இழந்தாலும்
இனித்தாலும் வலித்தாலும்
எழுந்து போக முடிவதில்லை..
உன் நினைவுக் கல்லறை தாண்டி!