நாளைய உலகின் விஞ்ஞானம் ஆளும்
விஞ்ஞான உலகமடா -இனி
மெய்ஞானம் பொய்க்குமடா
சத்துள்ள உணவுகள் சரித்திரத்தில் இடம் பிடிக்கும்
தரித்திர உலகத்திலே உணவுகள் இனி இல்லையடா
மாத்திரை வடிவத்திலே வேளைக்கு உணவுகள்
அளவிடப்பட்ட மருந்தாய் போகுமடா
காரும் பைக்கும் மாறுமடா
பறக்கும் தட்டுக்கள் ஆளுக்கொன்றாய் இயங்குமடா
சூரிய ஒளியின் இயக்கத்தில்
சுற்றிப்பறக்கும் நாளையடா...!!
பண்ட பாத்திரங்களுக்கு வேலையில்லை
வீட்டில் அடுப்படி ஒதுக்கிடும் தேவையில்லை
சாலைக்கென இடம் ஒதுக்கிட தேவையில்லை
சந்துக்கள் இல்லாமல் குடியேறி
சந்தோசம் தொலைக்கும் மனிதரடா !!
விஞ்ஞானம் வித்தை காண்பிக்கும்
விருந்துண்ணும் பழக்கம் மாறிவிடும்
திருமணம் என்பது சொர்க்கத்தில்
பறக்கும் தட்டேறி பறந்து சென்றிடவேண்டுமடா !!
ஆடைகள் மாற்றிட நேரமில்லா
அவசர உலகமாய் போகுமடா
அதற்கொரு இயந்திரம் உருவாகும்
உன் நேரத்தை அதுவே தீர்மானிக்கும் !!
இயந்திரங்களுடன் ஐக்கியமாகி மனிதன்
இயந்திரமாய் மாறும் நிலை வந்தே தீருமடா!
மருத்துவ மனைகளெல்லாம்
மன நல காப்பகமாகும்
அவ்வப்போது ஓரிரு மனிதன்
மனித சதையுடன் வந்துப் போவான்
இரவும் பகலும் புலப்படாது
இரவை பகலென்பான்
பகலை இரவென்பான்...!
இறுதி நாளை தானே குறித்து
தேவையான செலவுக்கு
மொத்தப் பணத்தையும் கொடுத்து பின்
தானே தகனமேடைக்கு சென்றிடுவான் ...!
உருகிட மனங்கள் இருக்காது
உதவிட மனிதம் இயங்காது
அழுதிட கண்ணில் நீரிருக்காது
அவலம் பட்டும் திருந்தவே திருந்தாது
விஞ்ஞானம் ஆளும் மனித இனம் வீழும்
அதுநாள் வரும் பாருமடா !!