காதலில் ஒரு மாலை

தனியொரு சாலையில்
நடந்தேனே ! இளவெயில் சுடுகின்ற
நாளிலே !
மருமுனையிலே எனதாசைக்
காதலி வந்தனள்
நேரிலே !
விழியால் விழியை இழுத்தாள்
மொழியால் மொழியை அடைத்தாள்
அழியாக் கவிதை போல
நிலையை மனதில் நிலைத்தாள்!
அவளின் முகம்
போல் நிலவு
அழகு இல்லை !
காது கொண்ட
மணிக்கு இணையாய்
ஒளியுமில்லை !
பின்பொரு நன்னாள் தனிலே
தனிமையில் அவளைக் கண்டு
என்னுடைய காதல் சொன்னேன்
அவளும் சொன்னாள்!
காதலெனும் கடலினில் மூழ்கி
முக்குளித்து நாங்கள் நின்றோம்
இதைக் கண்ட வெண்ணிலா முகிலால்
முகம் மறைத்தாள் !
அன்றந்த நாளின் இன்பம்
மறப்பதில்லை !
உலகினிலே அவள்போலே
அழகியில்லை !
இனிமேலும் பிறந்தாலே
அது எங்கள் பிள்ளை !
கண்ணாடி வளையல் கேட்டேன் !
காதோரம் சேதிகள் சொன்னேன்
காலின் கொலுசொலியைக் கேட்டேன்
மெல்லச் சிரித்தாள் !
கேட்டதெல்லாம் கிடைத்தே விட்ட
ஆனந்த நிலையில் நானோ
அவளிடம் சொர்க்கம் கேட்டேன்
முத்தம் கொடுத்தாள் !
உலகத்தில் காதலைப் படைத்தவன்
வாழியவே !
என்னையுமே முழுவதுமாய்
மாற்றிவிட்டாள்
அவள் நினைவை
என்னெஞ்சில் ஏற்றிவிட்டாள் !
-விவேக்பாரதி