இதய அஞ்சலி
Dr R T பார்த்தசாரதி M D.,
மலர்ந்த முகமோ மறைந்தது
மண்ணில் முத்தும் புதைந்தது !
நெருங்கிய நண்பரோ மறைந்தார்
நெஞ்சில் நிலையாய் உறைந்தார் !
மருத்துவத் துறையிலோ ஒளிர்ந்தார்
அகத்தில் தூய்மையுடன் மிளிர்ந்தார் !
எளியோர்க்கு கர்ணனாய் இருந்தார்
குடும்பத்தில் ஒருவராய் வாழ்ந்தார் !
நோய்களை அறிவதில் அறிவார்ந்தவர்
சிகிச்சை அளிப்பதில் கைதேர்ந்தவர் !
அடுத்தவர் வாழ்ந்திட வாழ்ந்திட்டார்
வாழ்பவர் வருந்திட மறைந்திட்டார் !
தேடுகின்றோம் உன்னைக் காணாமல்
வாடுகின்றோம் உந்தன் நினைவாலே !
மீண்டும் வந்திங்கு எமை காத்திடுவாய்
வேண்டிடும் எங்களுக்கு அருள்புரிவாய் !
புன்னகை பூத்திடும் உன்முகம் மீது
பூமாலைகள் பலநூறு விழுந்தனவே !
வரிசையில் வந்தனர் உனைப்பார்க்க
காத்து நின்றனர் உன்குரல் கேட்டிடவே !
நித்தம்நாம் உரையாடி மகிழ்ந்தோமே
நினைத்துப் பார்க்கிறேன் கண்ணீருடன் !
நடந்திடுமா மீண்டும்இனி என்வாழ்வில்
கடந்திடுமா என்காலமும் இனிநீயின்றி !
என்றும் உன்நினைவே எங்களுக்கு
எதிலும் உன்முகமே என் விழிகளுக்கு !
துடுப்பின்றி கடலில் தவிக்கின்றோம்
விடுப்பிலே சென்றாயோ விண்ணிற்கு !
இதய அஞ்சலி ஈரவிழிகளுடன்
பழனி குமார்
( எங்கள் குடும்ப டாக்டர் , 30 வருடமாக நெருங்கிய நண்பர் , சிறந்த மருத்துவர் , சென்ற வாரம் மறைந்தார் , அவருக்கு என் கவிதாஞ்சலி . எனக்கும் அவருக்கும் ஒரே வயது . மறக்க முடியாத மாமனிதர். )