நாங்களும் மனிதர்களே - மணியன்

என் பெயர்
எழுதிய அரிசியை
ஏனோ நான்
இன்று வரை விளைக்கவே இல்லை . . .

என்
காலில் தட்டிய
கல்லுக்குத் தெரியாது.
காலணி செய்து
கழுவும் வயிறு கொண்ட
கபோதி இவன் என்று . . .

என்
தறியில் பட்டு
ஏற்கனவே கிழிந்த வேட்டி
இன்னும் கிழிகிறது . . . .

என்
குழந்தைக்குத் தெரியாது
நானும் அவன் போல
மூட்டையை முதுகில்
முனகியே சுமக்கிறேன் என்று . . .

நான்
கழிவு ஓடைகளைச்
கைகளால் சுத்தம் செய்து
கழுவிய களைப்போடு
கஞ்சியிலே கை வைத்தால்
குடிசை வெளியே
குட்டை ஒன்று
குலுங்கிச் சிரிக்கிறது . . .

ஏனிந்தத் தடுமாற்றம்
எமைப் படைத்த ஆண்டவனே.
படைக்கையிலே உன்
வலக் கையிலே
வஞ்சம் தனை வைத்தாயோ. . .

காலத்தோடு சண்டையிட்டு
காலனைக் கொஞ்சம்
காக்க வைக்கும்
கள்ளத்தனம் எமக்கேன் தந்தாய் . . .

பார் முழுதும் இது போலே
பாவங்களை விதைப்பதுதான்
பாவி உன் திறமையெனில்
படைக்கும் தொழில் விட்டு விடு. . .
இல்லை எம்போல
பாட்டாளியாய் நீயும்
பிறந்து வந்து நாங்கள்
படும் பாட்டை நீயும் படு. . . . .




குறிப்பு :- படைத்தவனுக்கு
படைப்பது சுலபம்
படைப்பாளிக்கோ
படைப்பதே வலி . . .

எழுதியவர் : மல்லி மணியன் (31-Aug-14, 9:21 pm)
பார்வை : 92

மேலே