சாதிகள் இல்லையடி பாப்பா
சாதிகள் இல்லையடி பாப்பா;
தொப்புள் கொடியறுத்த தாதியும்
கல்லறை சேர் மனிதனும் - நீ
இன்னாரென்று கேட்கவில்லை
குருதி கலந்த பிறிதொருவன் சுவாசமும்
அள்ளிக் குடிக்கும் ஆற்று நீரும் - நீ
அன்னியனென்று ஒதுக்கவுமில்லை
உரமூட்டும் உண்டியும்
தலைசாய்க்கும் படுக்கையும் - நீ
சாதி பிரித்தோ தேர்ந்தெடுத்தாய்
வங்கிக் கடனுக்கும்
வளமான வீட்டுக்கும் - நீ
இனம் பார்த்தா செல்கின்றாய்
உடல் தினவு தீர்த்திடுவோன்
வாடகை மனைவியிடம் - தேகம்
மட்டும் கேட்கின்றான் - அவள்
சாதி கேட்க மறக்கின்றான்
வெய்யவன் வீச்சும்
அம்புலிதன் குளுமையும்
பெய்யவள் துளியுமே - நீ
யாரென்று காண்பதில்லை - அதன்
பயன் கொடாது போனதில்லை
படைத்தவன் ஒன்றென்றால் - அவன்
படைப்பிடம் தான் பிரிவினையேன்
புவிவாழ் காலமெல்லாம்
புண்ணியம் செய் மனமே - என்
புரையோடிய சாதி கொன்று
சாதி இரண்டொழிய வேறில்லை -
என்றென் ஒளவைப் பாட்டியும்
சாதிகள் இல்லையடி பாப்பாவின்
முறுக்கு மீசை முண்டாசுக் கவிஞனும்
நல்லறம் கூறிச் சென்றாலும் - நீ
இல்லறம் வாழப் பார்ப்பதேன் சாதி?