வெளிச்சம்

யாரும் மூடி மறைக்கவில்லை
அலைவீசிக் கொண்டிருக்கும் கடலினை..

யாரும் கடத்திவிடவில்லை
வளர்ந்தும் தேய்ந்து கொண்டிருக்கும் நிலவினை

யாரும் திரையிட்டு மூடவில்லை
வானத்தை.. சூரியனை... விண்மீனை....

யாரும் நிறுத்திவிடவில்லை
பேரிரைச்சலோடு கொட்டும் அருவியை...

யாரும் வெட்டி சாய்க்கவில்லை
பூத்துக் குலுங்கும் நந்தவனத்தை....

யாரும் கட்டிப் போடவில்லை
அவன் கவிதை பாடிய தென்றலை...

யாரும் முட்களால் நிரப்பவில்லை
அவன் நடந்த பாதைகளை....

யாரும் பிடித்து வைக்கவில்லை
அவன் சுவாசத்திற்கான காற்றினை...

அவன் சுவாசிப்பதை
யார் வேண்டாமென்றது??

நான்கு சுவருக்குள்
யார் அடைபட சொன்னது??

காரணங்கள் ஆயிரமிருக்கலாம்
அவளில்லை காரணமாய்...
குணப்படுத்தத் தெரியும் அவளுக்கு
ரணப்படுத்த தெரிந்திருக்கவில்லை..

வரவேண்டியதற்கு அனுமதி
யாரிடம் கேட்கவேண்டும்
வரவேற்க வான் வெளியும்
வயக்காடும் பூக்காடும்
வரிசையில் நிற்கிறது ....

குயிலும், நந்தவனமும்
நிலவும் நட்சத்திரமும்
கடலும் ஆகாயமும்...
தன்னை பாடுபவருக்கான காத்திருப்பில்..

வெளி வந்தால் தெரியும்
அத்தனை காத்திருப்புகளும்
வெளி வந்தால் வெளிச்சம்
மறுப்பதனால் இருட்டே...
கண்மூடிக் கிடந்தால்
பகலில் வெளிச்சமும் இருட்டுதான்..
----------------------------------------------------------------------
அருகில் இறைவன் இருக்கையில்
கண்மூடிக் கிடந்தாலும்
வெளிச்சம்தான்....

தீயில் குளிப்பவளை
தீ எரித்துவிடாது...

நல்லதும் கெட்டதும்
இறைவன் பார்வையில்...

நடக்கட்டும் எதுவும்...
நலமாய் அதுவும்
நல்லவர்களுக்கு மட்டுமாய்...

எழுதியவர் : சொ. சாந்தி (5-Sep-14, 4:46 pm)
Tanglish : velicham
பார்வை : 583

மேலே