மழையே வராமல் போய்விடு

என் வானத்து வீதியில்
உன் வருகையின்
ஊர்வலம் எதற்கு?
என் அழுகையின்
ஒப்பாரி கேட்கவா ?

முள்ளில்லா தேகத்தில்
எல்லையில்லாமல்
கசிகிற ரத்தத்தின்
வாடைகளை நனைத்து விடாதே
வந்தவழியே சென்று விடு !

போகிற போக்கில்
உன் வாசம் திறந்த
என் மனக்கதவுகளை
மூடிவிட்டுசெல் !
அனுமதில்லையென்றழுதி

தன்னிலையறியாத பெண்மை
உன்னில் நான் நனைந்ததும்
என்னை அவன் அணைத்ததும்
நீ அறிந்ததுதானே !
பிறகு எதற்கு
ஓயாமல் கூச்சலிட்டு நீ உலாவருகிறாய் .

நீ மூடிக்கிடந்தபோது
நாங்கள் முகூர்த்தம் பார்த்துக்கொண்டது
உன் காதுகளுக்கு எட்டிவிட்டதோ!
இரவையும் இரவல் வாங்கி
இடித்து கொட்டுகிறாய் ...

உன் பக்கத்துக்கு வீட்டு
பருவ நிலாவைப்போல்
என் முகூர்த்தமும்
முழுமை பெறவில்லை
என்பதை அறிந்து வந்திருக்ககூடதா !

அவஸ்தைகளின் பரிதவிப்பில்
ஸ்பரிசம் மோர்ந்து
அவன் படுத்துக்கிடந்த போது
உன் வெட்கத் தாழ்ப்பாள்
குடைக்கொண்டு மூடியதை
நினைவுப்படுத்த வந்தாயோ !

இமைக்காமல் நீ உருகியதும்
பசியெடுத்த பறவை
என்னை மிச்சம் வைக்காமல்
என் மச்சத்தையும் கடன் வாங்கியதை
நினைவுப்படுத்த வந்தாயோ !

ஏ 'அல்ப்பமே'
சொச்சத்தையும் சொல்லிக்கொடு
என்று அருகில் வந்தவனை
தள்ளிப்போ என்று அள்ளிக்கொண்டதை
சொல்லிக்காட்ட வந்தாயோ !

கை விரல்கள் கோதி
உச்சி முகர்ந்தவனை
முத்தமிட்டபோது
வந்து விழுந்த
உன் வியர்வை பங்காளியையும்
இப்பொழுது வம்புக்கு இழுக்கிறாயே !

சொற்கள் வந்துவிழு முன்
சொல்லிக்கொள்ளாமல் ஓடிவிடு
மன்னிப்பு கேட்கிறேன் !
கதவுகளை திறந்து விடு
முகவரி கொடுக்கிறேன்
முடிந்தால் அவனிடம் சென்று முறையிடு !
சேதியை சொல்வான்
இதயம் இல்லாத அவனுக்கு
உன் அறிமுகம் ஞாபகமிருந்தால் !!

எழுதியவர் : சுமித்ரா (5-Sep-14, 10:26 pm)
பார்வை : 85

மேலே