புற்று
நோயுற்ற வாழ்வோடும்
குறைவற்ற செல்வத்தோடும்
தரிக்கவியலா
பாத்திரம் தரித்து
மரணத்தின் இறுதிப்படிக்கட்டில்
நோயின் அம்புப் படுக்கையில்
பாவ பீஷ்மனென
படுத்திருக்கிறேன் !
மரணமும் நோயும்
வாய் பிளந்து
காத்திருக்க -
வாழ்க்கைக் கடற்கரையில்
எனதாயுள் ஆட்டுக்குட்டியை
திடீரென எங்கிருந்தோ வந்த
பிணி நண்டு
கொஞ்சம் கொஞ்சமாய்
கொன்று கொறிக்க
குருதிகொப்பளிக்குமெனது
புற்றுகளின் காயங்களில்
சிதைந்து கிடக்கின்றன
ஓராயிரம் கவிதைகள் !
புற்றில் வளரும்
நோய் நாகம்
என் செங்குருதியில்
நெளிந்து நீண்டு
வெள்ளை ரத்த அணுக்களை
கொத்தித் தின்று
ரணகளம் செய்தென்
ஆயுள் குறைக்கையில்
வெளித் தள்ளும்
நுரைகள்
கவிதைகளாய்
கொப்பளிக்கின்றன
வயதிற்குச் சலுகையளிக்கா
நோயின் அரசாங்கத்தில்
மரணமே வாயிற்காப்பாளன்
ஆகிப்போக -
உயிர் கூட்டின்
திறவுகோல்
விதியின் கைகளில்
ஒப்படைக்கப் பட்டிருக்கையில்
என்னை நானே
கருணைக்கொலை
செய்து கொள்ளும்
உயிர் வதமெனும்
உயர் வதத்தில்
கர்மாவின் விதிப்படி
மறுபரிசீலனைக் கிடமின்றி
எழுதப் படுகின்ற
தீர்ப்புகளின் தண்டனை
எனக்கா ? என் கவிதைக்களுக்கா ?