ஜோடி-உண்மையான காதல்கதை

உள்ளத்தை நெகிழவைக்கும்
காதல்ஜோடி
சிறுநீரகத்தால் இணைந்த ‘இதயம்’

* இரண்டு சிறுநீரகங்களும்
செயலிழந்து போன இளைஞரை எந்த
பெண்ணாவது காதலிப்பாரா?
- ஒரு பெண் காதலித்தார்!

* தீராத நோயால்
பாதிக்கப்பட்டிருக்கும் அந்த
இளைஞரை அந்த பெண் திருமணம்
செய்துகொள்வாரா?
- ஆமாம், திருமணமும்
செய்துகொண்டார்.

* சரி இப்போது அவர்கள்
எப்படி இருக்கிறார்கள்?
- அந்த பெண், ஒட்டுமொத்த
எதிர்ப்பையும்
புறந்தள்ளிவிட்டு தனது சிறுநீரகத்தில்
ஒன்றை தானம் கொடுத்தார்.
அன்பாகவும், ஆதரவாகவும்
செயல்பட்டு கணவரை பராமரித்துக்கொண்டிருக்கிறார்.
இருவரும் மகிழ்ச்சியாக
வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.

இப்படி எல்லாம் காதல் பூக்குமா?
என்று ஆச்சரியப்படவைக்கும் அந்த
பெண்ணின் பெயர் சபிதா, வயது 22.
கணவர் பெயர் ரமீஷ்.

அடி மேல் அடி விழுந்தது ரமீஷ்
வாழ்க்கையில்.
ஒரு வயது குழந்தையாக
இருக்கும்போது அப்பா இறந்தார். 8
வயதாக இருந்தபோது சிறுநீரக
பாதிப்பால் அம்மா இறந்தார்.

ரமீஷ்
பத்தாம் வகுப்பு படிக்கும்போது,
அவரது சகோதரிக்கு திருமணம்
நடந்தது. அதற்காக வீடும், நிலமும்
விற்கப்பட்டது.
ரமீஷ் படிப்பை நிறுத்திவிட்டு டேங்கர்
லாரி கிளீனராக
வேலை பார்த்துவிட்டு,
பின்பு டிரைவர் ஆனார். தலைசுற்றல்
அவ்வப்போது வந்தது.
பின்பு கடுமையான
சோர்வு தோன்றியது.
கோழிக்கோட்டை சேர்ந்த அவர்,
அங்குள்ள மருத்துவ
கல்லூரிக்கு சென்று பரிசோதனை செய்தபோது,
சிறுநீரக
பாதிப்பு என்பது தெரியவந்தது. அந்த
நோய் ஆபத்து பற்றி முதலில்
அவரிடம்,
அவரது சகோதரி தெரிவிக்கவில்லை.
அடிக்கடி ஆஸ்பத்திரி வாசம்
அனுபவித்த பிறகுதான் ஒருநாள்,
'அம்மாவுக்கு வந்த நோய் உனக்கும்
வந்திருக்கிறது. அதிகம் போனால்
ஆறு மாதம்தான்
உயிரோடு இருப்பாய்' என்ற தகவல்
அவருக்கு சொல்லப்பட்டிருக்கிறது.
அதைக்கேட்டு ரமீஷ் அழுது கண்ணீர்
சிந்தியபோது அவரது வாழ்க்கைக்குள்
சபிதா அடியெடுத்து வைக்கிறார்.
எப்படி தெரியுமா?

ஏரவானூர் என்ற பகுதியை சேர்ந்த
சபிதா நன்றாக படித்து பிளஸ்-2
படிப்பில் அதிக மதிப்பெண் பெற்றவர்.
ஆனால் ஏழை. வங்கி ஒன்றில் கல்விக்
கடன் பெற்று, ஹெல்த்
இன்ஸ்பெக்டருக்கான படிப்பில்
சேர்ந்தார். அது முடிந்ததும், தனியார்
ஐ.டி.ஐ. கல்வி நிறுவனத்தில்
வகுப்பு நடத்த சென்றார்.
இவரது அண்ணன் சதீஷின் நண்பர்
தான் ரமீஷ். அவர் தனது தங்கையிடம்
ரமீஷின் உடல் நிலையைக்கூறி,
அவரைப் போய் பார்க்க வேண்டும்
என்று சொன்னார். ரமீஷின்
குடும்பத்தோடு ஏற்கனவே அறிமுகம்
இருந்ததால், அவரை பார்க்க
சபிதா சென்றார்.
மருத்துவக்கல்லூரி சிறுநீரகத்
துறை பிரிவில்
மரணத்தை எதிர்நோக்கி,
பயத்தோடு படுத்திருந்த
ரமீஷை பார்த்தார். ஒருவரை ஒருவர்
பார்த்துக்கொண்டனர். ஆனால்
பேசவில்லை. வெளியே இருந்த
அவரது சகோதரியிடம் மட்டும்
பேசி விட்டு திரும்பிவிட்டார்.
இரண்டு நாட்கள் கடந்ததும் அந்த
சகோதரி, சபிதாவுக்கு போன் செய்து,
'முக்கியமான
வேலை ஒன்று இருக்கிறது. நான்
வெளியே சென்றுவரவேண்டும்.
காலை நேரம் மட்டும்
ரமீஷை கவனித்துக்கொள்ள
முடியுமா?' என்று கேட்டிருக்கிறார்.
சபிதா தனது பெற்றோரிடம் கேட்க,
அவர்களும் அனுமதி கொடுக்க,
ரமீஷிடம் சென்றார்.

அன்று கண்களை பரிசோதிக்க
அவரை அழைத்து சென்றிருக்கிறார்கள்.
கண்களுக்கு மருந்து ஊற்றப்பட்டதால்
பார்வை தெளிவில்லாததால்,
சபிதாவின்
கையை பிடித்துக்கொண்டு நடந்திருக்
கிறார், ரமீஷ்.
கிளம்பும்போது தனது செல்போன்
நம்பரை கொடுத்துவிட்டு வந்திருக்கிறார்.
ரமீஷிடம் செல்போன் கிடையாது.
அன்று இரவு அக்காளின்
செல்போனில் இருந்து 'குட் நைட்'
என்று மெசேஜ் அனுப்பியிருக்கிறார்.
அன்றே சபிதாவின் சிந்தனையை ரமீஷ்
ஆக்கிரமித்துக்கொண்டார்.

'இரு சிறுநீரகமும்
செயல்படாது என்பதால் எல்லோரும்
அவர் இறந்து போவார்
என்று கூறிக்கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் சிறுநீரக
மாற்று அறுவை சிகிச்சை செய்தால்
அவர் பிழைக்க வழி இருக்கிறதே' என்ற
கோணத்தில் அவர் எண்ணம்
சென்று கொண்டிருந்தது.
அதன்
பிறகு அவ்வப்போது சபிதாவுக்கு ரமீஷ்
மெசேஜ் அனுப்பியிருக்கிறார்.
எப்போதாவது போனில் பேசவும்
செய்திருக்கிறார். மரண
பயத்தோடு அவர்
தகவல்களை பரிமாற,
பதிலுக்கு சபிதா நம்பிக்கையூட்டும்
செய்திகளை கூறிக்கொண்டிருந்திருக்கிறார்.
அந்த தகவல் பரிமாற்றத்தின்
இடையே இருவரும் அறியாத
வகையில் காதலும் கொஞ்சம்
கலந்திருக்கிறது.

பேச்சும், குறுஞ்செய்திகளும் தொடர
இருவீட்டாரும்
ஓரளவு விஷயத்தை யூகித்துக்கொண்டு,
'அவன் எந்த நிமிடத்திலும்
இறந்து போகக்கூடியவன். உன்
வாழ்க்கையை பாழாக்கிக்கொள்ளாதே'
என்று கூறியிருக்கிறார்கள்.
சபிதா அதை பொருட்படுத்தவில்லை.
ஒருநாள் இருவரும்
சேர்ந்து ஸ்டூடியோவுக்கு சென்று ஜோடியாக
போட்டோ எடுத்திருக்கிறார்கள்.
அது வீட்டிற்கு தெரிந்து, பெரும்
பிரச்சினை கிளப்பியிருக்கிறது. அடி,
தடி, கலாட்டா நடக்க
மனமொடிந்து போன
சபிதா தனது செல்போனை எடுத்து உடைத்து எறிந்துவிட்டார்.

மறுநாள் காலையில், 'இனி நான்
திரும்பி வரமாட்டேன்'
என்று கூறிவிட்டு கிளம்பிவிட்டார்.
அதை பெற்றோர் பெரிய விஷயமாக
எடுத்துக்கொள்ளவில்லை.
பஸ் நிலையத்துக்கு சென்ற அவர்,
அங்கிருந்து ரமீஷ§க்கு போன்
செய்து அழைத்திருக்கிறார். 'இனி நான்
வீட்டிற்கு செல்லமாட்டேன். ஐ.டி.ஐ.
வகுப்பை முடித்துவிட்டு வரும்போது,
என்னை அழைத்து செல்ல நீங்கள்
வந்துவிடுங்கள்' என்றிருக்கிறார்.

'உடலும் சரியில்லை, மனதும்
சரியில்லை. ஜோடியாக சென்றால்,
அக்காளும் ஏற்றுக்கொள்ளமாட்டாள்.
கையிலோ வெறும்
ஐம்பது ரூபாய்தான் இருக்கிறது.
என்ன செய்வது?' என்று அவர்
குழம்பினாலும், காதல்
அங்கே வென்றுவிட்டது.
ஐம்பது ரூபாயுடன் அவர்கள்
இருவரும்
தலைமறைவாகி விட்டார்கள்.
போலீசில் புகார் ஆனது. அவர்கள்
கோவிலுக்கு சென்று மாலைமாற்றிவிட்டு,
பதிவு அலுவலகத்தில் போய்
திருமணத்தை பதிவு செய்துவிட்டார்கள்.

இப்படி எல்லாம் ஒருபக்கம்
பிரச்சினை அரங்கேறிக்கொண்டிருக்க,
தனது கணவரை அழைத்துக்கொண்டு சபிதா,
மருத்துவ கல்லூரி சென்றார்.
பரிசோதனைகளை முடித்த
டாக்டர்கள், 'என்ன
செய்வது பாதிப்பு எல்லைமீறி போய்விட்டது.
இவர் கல்யாணம்
வேறு செய்திருக்கிறார்.
ஒரே வழி சிறுநீரக
மாற்று அறுவை சிகிச்சைதான்.
அதையும் உடனே செய்யவேண்டும்.
உடனடி தேவை டயாலிசிஸ்.
தாமதிக்காமல் அதற்கான
வேலையை தொடங்குங்கள்'
என்றிருக்கிறார்கள்.
அதைக்கேட்ட சபிதா, 'நாங்கள்
திருமணம் செய்துகொண்டதால்
இருவர் வீட்டிலும்
எதிராகி விட்டார்கள். ஒருவரும்
இங்கே எட்டிப்பார்க்கக்கூட
வரமாட்டார்கள். என்ன
செய்வது என்று தெரியவில்லை'
என்று அழுதிருக்கிறார்.
சதீஷ் என்ற டாக்டர்
ஆறுதல்படுத்தியிருக்கிறார்.
'உதவிக்கு ஆள் இல்லாமல்
இருப்பவர்கள் தங்கள்
தைரியத்தை இழந்து விடக்கூடாது.
தைரியமாக இரு. எங்களால்
முடிந்ததை எல்லாம் நாங்கள்
செய்து பார்க்கிறோம்'
என்று நம்பிக்கையூட்டி இருக்கிறார்.
டயாலிசிஸ் தொடர்ந்திருக்கிறது.
அப்போதுதான் தனது சிறுநீரகம்
ஒன்றை வழங்க
சபிதா முன்வந்திருக்கிறார்.
அது பொருந்திப்போக, ஆபரேஷன்
செய்ய பணம் தேவைப்பட்டிருக்கிறது.
என்ன
செய்வது என்று அவருக்கு தெரியவில்லை.
ராஜேஷ் என்ற டாக்டர்
கருணையோடு அதற்கான
முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறார்.
நோயாளிகளின் உறவினர்களும்,
டாக்டர்களும் சிறிதளவு பண
உதவி செய்ய, வெற்றிகரமாக
ஆபரேஷன் முடிந்துவிட்டது.

'இணை குருவிகள் வென்றுவிட்டன'
என்று டாக்டர்கள்
மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.
தற்போது இந்த
இளந்தம்பதி கோழிக்கோட்டில் உள்ள
ஒரு பார்மசியில் வேலைபார்க்கிறது.
அருகில் ஒரு வாடகை வீட்டில்
வசிக்கிறார்கள். இப்போதும் ரமீஷ்
தொடர்ந்து மருந்து சாப்பிட்டுக்கொண்டிருக்கிறார்.
மாதம் பத்தாயிரம்
ரூபாய்க்கு மருந்து வாங்க
வேண்டியதிருக்கிறது.
தீராத நேசத்தோடும்,
திகைக்கவைக்கும் அன்போடும்
காதலுக்கு எடுத்துக்காட்டாய்
வாழ்ந்து கொண்டிருக்கிறது, இந்த
ஜோடி!

எழுதியவர் : daily thanthi (6-Sep-14, 6:44 pm)
சேர்த்தது : Karthi
பார்வை : 418

மேலே