இறப்பின் படிமம்

நேற்றைய
மழை நாளில்
இதே தார் சாலையினொரு
விபத்தில் தான்
அவன்
கொல்லப்பட்டான் !
அவனது இறப்பின்
படிமம்
எதிர்வரப்போகிற
கருணையற்ற காலங்களின்
மீது
படிந்திருக்கிறது !
எது பற்றிய
அக்கறையுமின்றி
சாலை ஊர்ந்தோடுகிறது
வழியோடிகளின்
போக்கிற்கேற்ப
வாகனங்கள் விரைகின்றன !
நேற்று
நாளையும் அழைத்துவருவானென்ற
நம்பிக்கையில்
அவன் விரல் பிடித்து
குதூகலத்தோடு குதித்தோடிய
குழந்தை -
இன்று தந்தையின்
குருதிபடிந்த
சாலையினை
ஏக்கத்துடன் பார்த்தபடி கடக்க
அதன்
விழிகளின் கண்ணீரில்
உறைந்து கிடக்கிறது
தந்தையற்ற குழந்தைகளின்
பாதுகாப்பற்ற எதிர்காலம் .