மறக்கவே நினைக்கிறேன்
மின்மினிப் பூச்சிகளால்
தன் கூட்டிற்கான வெளிச்சத்தைச்
செய்து கொள்ளும்
தூக்கணாங்குருவி
பரிகசிக்கிறது என்னை...
இரவல் ஒளியால் பிரகாசிக்க
நீயொன்றும் நிலவில்லையென்று!
வெட்கித் தலைகுனிந்து,
வெறுங்கை கொண்டு
மறைத்து விடுகிறேன்..
திடுமென முளைத்த
ஒற்றைச் சூரியனையும்!
முன்னொரு காலத்தில்,
ஒளியென்ற ஒன்று
இருந்ததாக நம்பிய,
முன்னொரு காலத்து என்னை
மீட்கொணர முயல்கிறேன்!
எனக்கே எனக்கென
கச்சிதமாய்ப் பொருந்தும்
இருள் போர்த்திக் கொண்டவுடன்,
நீ நீயாகவும்
நான் நானாகவும்
இருக்கச் சம்மதிக்கிறேன்....
ஒளிக்காய் ஊறிய
உமிழ்நீர் விழுங்கியபடி!