வாழ்கையின் 5 விரல்கள்
காலை எழுந்தவுடன் சிலர் கைகளைப் பார்த்து கண் விழிப்பதை பலரும் பார்த்திருக்கிறோம் .அந்தக்கைகளின் மேல்பகுதியில் லக்ஷ்மியும் நடுபகுதியில் சரஸ்வதியும் கீழ்பகுதியில் விஷ்ணுவும் இருப்பதாக உரைக்கிறது ஒரு வடமொழி ஸ்லோகம் .ஆனால் அந்தக்கைகளோடு இணைந்த ஒரு வாழ்வியல் சிந்தனையைப் பற்றியதே இந்தக்கட்டுரை.
"மிகினும் குறையினும் நோய் செய்யும் " என்றார் வள்ளுவர் .இது மருத்துவத்திற்கு மட்டும் அல்ல வாழ்கைக்கும் பொருந்தும். பெரும் புகழும் பணமும் அடைந்த மனிதர்கள் குடும்ப வாழ்கையில் நிம்மதி இன்றி தவிப்பதும் , குடும்பத்திற்
க்காகவே வாழ்ந்து வெளி உலகில் அதிகம் சாதிக்காதவர்களை இந்த சமூகம் கண்டிருக்கிறது . அனைத்து வகையிலும் மனநிறைவுடன் வாழ்வதும் அத்தனை எளிதல்ல!
அத்தகைய நிறைவான ஒரு வாழ்க்கைக்கு தினம் தினம் சிந்தித்தலும் திட்டமிடுதலும் தொடர்ந்து செயல்படுவதும் இன்றியமையாததாகும் .அதற்க்கான ஒரு சிறு முயற்சியே இந்தப்பகிர்வு.
வாழ்க்கையின் 5 முக்கியமான பகுதிகளைப்பற்றி காலை எழுந்தவுடன் சிந்திப்பதும் திட்டமிடுவதும் இதற்கு உறுதுணையாக இருக்கும் .மேலும் நம் செயல்களில் நடுநிலைமை தவறும்போது அது நமக்கு மீண்டும் நினைவுப்படுத்துவதாகவும் அமையும் .
1.சுயத்தேவைகள் - இது முதல் விரல்.நமது அவசியங்கள்,ஆசைகள்,கனவுகள்,உடல் நலம் போன்றவை பற்றிய சிந்தனையும் திட்டமிடுதலோடு இது தொடங்கும்.
2.குடும்பம்- இது அடுத்த விரல்.நம் தாய் தந்தை மனைவி பிள்ளைகள் சகோதர சகோதரிகளின் தேவைகள் உறவுகள் பற்றிய சிந்தனை இது.
3.செல்வம் -நம் அனைத்து தேவைகளையும் தீர்த்து வைக்க தேவையான பணத்தைப்பற்றிய எண்ணம் இது.நம் மாத வருமானம் செலவுகள் சேமிப்புகள் பற்றிய தினசரி திட்டமிடலுக்கு இது உதவும்.
4.தொழில் இது அடுத்த விரல்.நமது பணத்தேவையை மட்டுமல்ல மனநிறைவையும் சமூகத்தில் ஒரு அங்கீகாரம் தருவதும் நம் தொழில் தான்.பாரதி பாடினான் " கவிதை எமக்குத்தொழில்!" என்று.இது பணம் சேர்க்கும் முயற்சிமட்டும் அல்ல அதையும் தாண்டியத்தேடல்.
5.ஐந்தாவது விரலே நம்மை முழுமைப் படுத்தும் விரலாகும்.நம் சுயத்தேவைகளைத் தாண்டிய சமூகப் பார்வை நமக்குத் தேவை.இன்றைய தினம் நாம் பேசவேண்டிய,சந்திக்க வேண்டிய நண்பர்களை பற்றிய சிந்தனையும் சக மனிதர்களுக்கு நாம் செய்யக் கூடிய சிறு உதவிகளைப் பற்றிய எண்ணமும் இவ்விரலில் அடக்கம்.
காலை எழுந்தவுடன் மற்ற நிகழ்ச்சிகள் நம்மை பாதிக்கும் முன் இந்த 5 விஷயங்களைப் பற்றி சிந்திப்பதும் திட்டமிடுவதும் செயல்படுவதும் நம் வாழ்வில் வெற்றிடங்களைத் தவிர்த்து நிறைவைத் தரும் என்று நம்புகிறேன்.நன்றி!வணக்கம்.