ஒரு நிலவின் விடியல்

ரோகிணியால் அவள் காதுகளை நம்பவே முடியவில்லை. மீண்டும் ஒருமுறை கேட்டாள்.
" No. 16 -க்கு தானே ...! குழந்தை பொறந்துடுச்சா..??"
மறுமுனையில் ,நர்ஸ் கமலா ," ஆமாம்மா ,நீலவேணி அம்மாதான் சொல்ல சொன்னாங்க ,ஆண் குழந்தை - தாயும் சேயும் நலம் ,உங்க கிட்ட சொல்ல சொன்னாங்க " என்றாள்.
ரோகிணி உணர்ச்சி வசப்பட்டிருந்தாள். கண்களில் கண்ணீர் திரண்டது.
கமலா ," அம்மா .." என்று மறுமுனையில் தான் இருப்பதை நினைவூட்டினாள்.
ரோஹிணி, " தோ...உடனே கிளம்பி வரேன் " என்று ரீசிவரை வைத்தாள்.
உடம்பில் ஒரு பரபரப்பு தொற்றிகொண்டது. சில வினாடிகள் ,என்ன செய்வதென்று தெரியாது தவித்தாள்.
பின் அலைபேசியினை எடுத்து ,எண்களை தட்டினாள்.
" சொல்லு ,ரோஹிணி .." - மறுமுனையில் கணவன் கிஷோர்.
" என்னங்க ...No. 16 -க்கு குழந்தை பொறந்துடுச்சிங்க ..." ,சந்தோசத்தின் உச்சத்தில் கண்ணீர் பெருகியது.
" அப்படியா ..! சரி ,அதுக்கென்ன இப்போ ..!!?" என்றான் உணர்ச்சிகளற்ற குரலில்.
எதிர்பார்த்ததுதான்.
சமாளித்தபடி, " இல்ல ,நீங்க வந்திங்கனா ,..சேர்ந்து போலாம் ..அதான் ..!" என்று குரலால் இழைத்தாள்.
" ஆபிஸ்ல மீட்டிங் இருக்கு ... நைட்டு வரேன் " -என்ற படி ,துண்டித்துவிட்டான்.
இன்னமும் கோபம் தீரவில்லை போலும்.பெருமூச்சு விட்டாள்.
"முனி வீட்ட பாத்துக்கோ ", என்று வேலைக்காரியிடம் கூறிவிட்டு வந்தாள்.
முகப்பில் ரோஹிணி ,MBBS மற்றும் கிஷோர் ,MBA என்று பொறித்திருந்தது.
'கூட்டல் குறி' ஒட்டபட்டிருந்த காரில் கிளம்பினாள். கார் முன்நோக்கி செல்ல ,சிந்தனை நினைவு பாதையில் பின்னோக்கி சென்றது.

----------------------------அன்று-------------------------------------------

" ரோஹிணி ,ரூமுக்கு வா .." - அவ்வளவுதான் கூறினாள் நீலவேணி ,தொலைபேசியில்.
நீலவேணி - மருத்துவ மனையின் Dean மற்றும் மூத்த வைத்தியர்.
ரோஹிணி சிறிதுநேரத்தில் நீலவேணியின் ஆபிஸின் அறைக்கதவை தட்டினாள்.
" கம் இன் "
அறையின் பக்கவாட்டில் இருந்த ஜன்னலுக்கு வெளிய பார்வையினை செலுத்தியபடி ,நீலவேணி நின்றிருந்தாள்.
தலைமைக்குரிய கம்பீரம்.மற்றொருவரின் கண்ணினை படிக்கும் அளவிருக்கு கண்ணில் ஒரு கூர்மை.
ரோஹிணி அருகே சென்று ," எஸ் ..மேடம் " என்றாள்.
திரும்பிய நீலவேணி, " ப்ளார்" என்று விட்டாள் ஒரு அறை.
அப்புறம் எத்தனை திட்டுகள் ,அடிகள் ...அதை தொடர்ந்த இவள் அழுகைகள்,கதறல்கள்.
கடைசியில் காலில்தான் விழுந்தாள்.இறுதியாக ,நீலவேணி ஒரு வழியாக சமாதான மானாள்.ரோஹிணிஅழுது சமாதானமாக்கினாள் என்பதுதான் சரி.
அன்று தொடங்கிய போராட்டம் இன்றுதான் முடிய போகிறது.

---------------------------------இன்று---------------------------------------------


'சுபா - baby shop' என்று சாலையோரம் கண்ணில் பட ,கண்ணீரை துடைத்துக்கொண்டு இறங்கினாள்,ரோஹிணி.
சில நிமிடங்களில் ,
குழந்தைக்கு தேவைபடுகின்ற துணி ,நாப்கின், ஷோப் என அனைத்தையும் பெற்றுக்கொண்டு காரை கிளப்பினாள்.உடன் கணவன் இல்லாதது ஒருவிதத்தில் வருத்தமாகத்தான் இருந்தது.
கிஷோர் - அவன் என்ன செய்வான் ,மிகவும் நல்லவன். அன்று இவளுக்காக நீலவேணியிடம் எவ்வளவு திட்டுவாங்கினான். எல்லாம் தனக்காகத்தான் ,தன்னால் தான் என்னும்பொழுது ஒரு நேரத்தில் சந்தோசமும் ,துக்கமும் பொங்கியது. ஆனால் ,அதற்கு பின்தான் அவளிடம் சரியாகக்கூட பேசுவதில்லை.
மருத்துவமனை நெருங்கியது. போர்ட்டிகோவில் காரை நிறுத்தினாள்.
மெல்ல தலையினை உயர்த்தி மருத்துவமனையினை பார்த்தாள். எவ்வளவு பெரிது......பொதுநலம், மனநலம், இதய சிகிச்சை ,சிறுநீரக சிகிச்சை - என ஒவ்வொன்றிக்கும் ஒரு கட்டடமாக ,முகப்பில் தலைமை அலுவலகமும் கொண்டு இந்த ஊரிலேயே பெரிய மருத்துவமனை என்பதை சொல்லாமல் சொல்லியது.இங்கு மருத்துவ படிப்பும் சொல்லிகொடுக்கபட்டது.
முதன்முதலாக இந்த மருத்துவ கல்லூரி கல்லூரிக்கு மாணவியாக ரோஹிணி வந்த போது, மருத்துவத்தை ஒரு கனவாகத்தான் எண்ணினாள்.
ஆனால் ,நீலவேணி - அவள்தான் ரோஹிணி- ஐ முழுமையாக மாற்றினாள்.
இவளின் ஏழ்மையினை ,தாழ்வுமனப்பான்மையினை ,அனைத்தையும்.
நன்குபடித்த ,வறுமையில் தத்தளித்த ரோஹிணி -ஐ பிறர் பாராட்டும் படி ,ஒரு மருத்துவர் ரோஹிணி யாக மாற்றிய பெருமை நீலவேணி -யே சாறும்.
இல்லாத தாய் -தந்தைக்கு இணையாக ,இரண்டுமாய் இருந்து கிஷோரை மணமுடித்து வைத்ததும் அவள்தான்.இப்படி இருந்த நீலவேணி தான் அன்று பொங்கி எழுந்தாள்.
தவறு செய்தது என்னவோ இவள்தான். சாதாரண தவறு அல்ல ,பெரும் தவறு.
திருமணமுடித்து நான்கு ஆண்டு கழித்தும் ,குழந்தை உண்டாகாததை எண்ணி அச்சப்பட்டு பரிசோதனை செய்ததில் ,ரோஹிணி யின் மலட்டுத்தன்மையை வெளிச்சம் போட்டுக்காட்டியது ,அந்த பரிசோதனையின் ரிப்போர்ட்.கிஷோரிடம்
எந்த குறையும் இருக்கவில்லை.

கிஷோரின் அம்மா ,இரண்டுவருடம் முன்பு இறந்தவள், இறக்கும் வரையிலும் தன் மகன் ரத்தத்தில் ஒரு வாரிசு வேண்டும் என்று கேட்டுகொண்டே இருந்தாள்.இறந்த பின்னும் கூட அந்த குரல் அடிக்கடி தூக்கத்தில் ஒலிப்பதைக்கண்டு மிரண்டு போயிருந்தாள்,ரோஹிணி.
அப்போது தான் உதித்தது அந்த எண்ணம்,விபரீத எண்ணம்.
மனநல பிரிவில் ,அறை எண் - 16 -க்கு வந்திருந்தாள் ஒரு இளம்பெண்.வயது 25 இருக்கும்.ஊட்டி மழை திருப்பத்தில் அனாதையாக நின்று இருந்தவளை பாதுகாப்பு கருதி இங்கு சேர்த்துவிட்டு போனது ஒரு நல்ல உள்ளம்.
பேப்பரில் போட்டாகிவிட்டது,போலீசிடம் பையில் செய்தாகிவிட்டது. ஏன் ...தொலைகாட்சியில் கூட ஒளிபரப்பியாகிவிட்டது.
'அவள் யார், என்ன -ஒன்றும் இன்றுவரை தெரியவில்லை.அவளுக்கும் ஒன்றும் தெரியவில்லை, எப்போதும் 'பே ' என்று பார்த்தபடியே இருந்தாள்.அவள் பெயர் கூட யாருக்கும் தெரியாமல் ,அனைவரும் அவளை " No- 16" என்றே அழைத்து வந்தார்கள்.நீலவேணியும் இருக்கும் வரை இருக்கட்டும் என்று விட்டுவிட்டாள்.
அந்த எண்ணத்திற்கு, முதலில் சம்மதிக்காத கிஷோர் ,ரோஹிணி ஒரு வாரம் பட்டினி கிடந்து ,சீரியஸ் ஆகவே முடியில் மனமின்றி ஒத்துகொண்டான்.
நீலவேணி ஒரு மருத்துவ தொடர்பிற்காக வெளியூர் சென்றிருந்த சமயம் ரகசியமாக கிஷோரை அழைத்து வந்தாள்.'No -16' யும் தூக்க மாத்திரை கொடுத்து தூங்கவைத்தாள்.
"அதை " -நடத்தியும் வைத்தாள். "அது " நடந்து சரியாக மூன்று மாதம் கழித்து ,
'No. 16' கர்ப்பம் என தெரிந்ததும் ,ரோஹிணி சந்தோசத்தின் உச்சிக்கே போனாள்.
ஆனால் விஷயம் தெரிந்தவுடன் நீலவேணியோ கோபத்தின் எல்லைக்கே போனாள்.' யார் ?,யவர்..?' -ஒரு விபரமும் தெரியவில்லை.ஆண் மருத்துவர்கள் ,சேவகர்கள் ,கடைநிலை ஊழியர்கள் ஒவ்வொருவரின் பின்னும் நீலவேணியின் கழுகு பார்வை படர்ந்தது.
ஆள் யார் - என்று தெரியாது No. 16 - ஐ பராமரிக்க அனுமதித்தது போல் ,அவள் குழந்தையையும் வளர அனுமதிப்பாள் என்று தெரியும், ரோஹிணிக்கு.நீலவேணியின் இரக்கமனம் அப்படிப்பட்டது.குழந்தை பிறக்கும் பைத்தியகாரிக்கு ...நான் வளர்க்கிறேன் என்று கேட்டால் தத்து கொடுத்துவிடுவாள் ,அந்த நல்ல மனதை பாராட்டவும் செய்வாள்.தன் கணவனின் சொந்த ரத்தத்தில் தனக்கு ஒரு குழந்தை ,அவன் தாயார் ஆசைப்பட்டதுபோல் ஒரு குடும்பவாரிசு.வாடகை தாயாக இருப்பினும் ,எதிர்காலத்தில் திரும்ப கேட்க நேரிடலாம் என்ற அச்சமுண்டு.இப்போது அதுவும் இல்லை.இதுதான் ரோஹிணியின் திட்டம்.
மருத்துவமனையின் பெயர் கெட்டுவிட கூடாது என்பதற்க்காக No-16 -ன் கர்ப்பத்தை ரகசியமாக பாதுகாத்தார்கள்.எல்லாம் சரியாகத்தான் போய் கொண்டிருப்பதாக எண்ணினாள்,ரோஹிணி..'அன்று' நீலவேணி அறைக்கு அழைக்கும்வரை.
அறையும்,அடியும்,திட்டும் வாங்கியபின்தான் தெரிந்தது, நீலவேணி குற்றவாளி யார் என்ற பொறுப்பினை நர்ஸ் கமலா விடம் கொடுத்திருப்பதும் ,அவளும் மெல்ல மெல்ல படிவேட்டினை பார்த்தும் ,ரகசிய கேமராவின் பதிவுகளை பார்த்தும் கிஷோர் வந்து போனதையும் ,ரோஹிணி அடிக்கடி மனநல பிரிவில் ,குறிப்பாக No- 16 -க்கு அருகில் தவம் கிடப்பதையும் குறிப்பெடுத்து கூறவெ ,நீலவேணி ரோஹிணி யின் மீது தன் பார்வையினை திருப்பினாள்.
எதிர்பாராத விதமாக ரோஹிணியின் கர்ப்ப பரிசோதனை கண்ணில் படவே ,ரோஹிணியின் திட்டம் நீலவேணிக்கு அப்பட்டமானது.கடைசியில் ரோஹிணி காலில் விழுந்து கதறவே நீலவேணி மெளனமாக வெளியேறிவிட்டாள்.
* * *************************************** ***
இதோ இன்று,குழந்தைக்கான பொருட்களை கூடையில் சுமந்த படி ,No-16 -ஐ நெருங்கிக்கொண்டு இருக்கிறாள்,ரோஹிணி.அறை வாசலில் ,நீலவேணியும் கமலாவும் நின்று இருந்தார்கள்.அன்று சனிகிழமை, அதனால் நாளை விடுமுறையினை மனதில் கொண்டு ஏறக்குறைய அனைவரும் மருத்துவமனையில் இருந்து விடைபெற்று இருந்தார்கள். ஆட்களின் நடமாட்டம் வெகு சொற்பமாகவே இருந்தது.மனநலபிரிவில் ஆட்கள் சுத்தமாக இல்லை. வெறிச்சோடி கிடந்தது கட்டடம்.
நீலவேணி நெருங்கி ," மேடம் ,ரொம்ப தேங்க்ஸ் .." என்றாள்.
நீலவேணி, " ரோஹிணி ,உனக்கு நான் என்ன சொல்றதுனே தெரியல ,இப்ப கூட ஒன்னும் தப்பில்ல..ஒரு அனாதை ,ஆதரவற்ற குழந்தைய போய் தத்து எடுத்துக்கலாம்...புரிஞ்சிக்கோ.." என்றாள்.
ரோஹிணிக்கு கண்ணில் நீர் கோர்த்தது.அன்றும் அவளின் கணவன் ஆயிரம் முறை இதையேதான் கூறினான்.இன்று நீலவேணியும் எல்லாம் முடிந்த பிறகு அதையேதான் கூறுகிறாள்.
'ஆனால் எல்லாம் முடிந்த பிறகு ,இப்போது எதற்கு கூறுகிறாள்..?!!'
திரும்பி கமலா -வை பார்த்தாள்..அவள் முகத்திலும் ஒரு மகிழ்ச்சியே இல்லை.
ஒரு வேலை குழந்தை கைகால் முடமாக பிறந்து விட்டதோ..!!
எதுவாக இருந்தால் என்ன ..! குழந்தை நமக்குதான் என்று முடிவாகட்டும் என்றெண்ணி டக்கென்று நீலவேணியின் காலில் விழுந்தாள்.
" ப்ச் ..ரோஹிணி ..எழுந்திருமா..!! என்னை கஷ்டபடுத்தாத..உனக்கு தத்து எடுக்க விருப்பம் இருந்த சொல்லு..அட்ரஸ் நான் தரேன்..அப்பறம் உன் இஷ்டம் .." என்று கூறிவிட்டு நீலவேணி தலைமை அலுவலகம் நோக்கி நடந்தாள்.
ரோஹிணி -யோ தவிப்பில் இருந்தாள்.குழந்தைக்கு என்னாச்சோ..!ஏதாச்சோ ..!! ஏன் இத்தனை சோகம் ..அனைவரின் முகத்திலும் ,எது எப்படியோ அது என் குழந்தை என்ற முடிவில் அறையின் உள்ளே நுழைந்தாள்,குழந்தைக்கான பொருட்களை கையில் அள்ளியபடி.
படுக்கையில் No -16 கண் மூடியபடி ஒருக்களித்து கிடந்தாள்.குழந்தை அருகே கைகாலை ஆட்டியவாறு படுத்திருந்தது.தலை,கை, கால், முகம், மூக்கு - என குழந்தையை கண்களால் அளவெடுத்தாள்.எல்லாம் சரியாகத்தான் இருக்கிறது. மெல்ல குழந்தையை தூக்கி உச்சி மோர்ந்தாள்.பால் வாசம் வீசியது.
No- 16 மெல்ல அசைந்தாள்.ரோஹிணியின் கையில் குழந்தை இருப்பதை கண்டாள்.கையூன்றி எழுந்து படுக்கையில் சாய்ந்து அமர்ந்தபடி ," என் குழந்தை " என்று ரோஹிணி-ஐ நோக்கி இரு கைகளை விரித்தாள்.
சடாரெண்டு மனதில் மின்னல் வெட்டியது ,ரோஹிணிக்கு.அப்போதுதான் கவனித்தாள்.No -16 க்கு தலை நேர்த்தியாக பின்னப்பட்டு இருப்பதும் ,துணி கசங்காமல் இருப்பதும்...கண்ணில் தெரியும் ஒரு தெளிவு...
' தெளிந்து விட்டதா என்ன ..!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!'
திரும்பி கமலாவை பார்த்தாள்,வினாக்குறியோடு.'ஆமாம் ' என்பதற்கு அறிகுறியாய் தலையை மேலும்கீழும் ஆட்டினாள்.
" உங்க எல்லார்க்கும் நான் ரொம்ப கடமை பட்டு இருக்கேன்மா...கிட்டத்தட்ட ஒரு ஒன்ற வருசமா பைத்தியமா இங்க இருந்திருக்கேன்.நானும் அஸ்வினும் வீட்ட விட்டு ஓடிவந்து கல்யாணம் பண்ணி குடித்தனம் பண்றப்பதான் அந்த ஆக்சிடென்ட் நடந்தது...என் கண்ணு (அழுகை ) ..கண்ணு முன்னாலேயே அஷ்வின் செத்துட்டான்...அந்த அதிர்ச்சியோட மலைல இருந்து விழுந்தவதான்..இப்பதான் இந்த உலகத்துக்கே திரும்பி வரேன்..இப்ப கூட இது அஷ்வினோட குழந்தையானு தெரியல ...யாருதா இருந்த என்ன...என்னோட ரத்தம்...என் மனசுல இருக்கற அஷ்வின்னோட மறுஜென்மம்..என்னோட நம்பிக்கையே இவன்தான்..அஷ்வின் எனக்காக வாங்கி போட்ட வீடு ஆன்லைன் செர்ஸ் -ன்னு வாழ தேவையான அளவு சொத்து இருக்கு...இவனையும் அஷ்வின் மாதிரி ஒரு நல்ல மனுசனா வளத்த போறேன் ..அதுலதான் என் வாழ்க்கையோட அர்த்தமே இருக்கு...நான் யார் என்னனே தெரியாம இவ்ளோ நாள் பாத்துகிட்டதுக்கு ரொம்ப நன்றி..என்னிக்கும் இத நான் மறக்க மாட்டேன் ...ஆங் ..எம்பேரே இன்னும் சொல்லல...என் பேர் ரேஷ்மா ...நேத்துவரைக்கும் அனாதை..இன்னிலிருந்து இவன்தான் என் உலகம்...டேய் ...அஷ்வின் ...என்னடா அப்படிபாக்ற...சிரி..அம்மாவ பாரு ..என் செல்லம்.."
என்றவள் ,குழந்தையை வாங்கி கொஞ்சி குலாவ ஆரம்பித்தாள்...
பிரமித்து போயிருந்தாள்,ரோஹிணி. பேசியது யார் ...No -16 ஆ ..இல்லை ,ரேஷ்மா....குழந்தையின் தாய்..!!
இடிந்து போனாள் ,ரோஹிணி. என்ன அளவாக ,என்ன அழகாக வார்த்தைகளை உதிர்த்துவிட்டாள்..
ஆனால் ,அதன் கனம்.
ரோஹிணிக்கு கண் இருட்டியது..கதவருகே சென்று கதவினை பற்றி கொண்டாள்.நீலவேணி ,கமலா வின் சோகத்திற்கு காரணம் இதுதானா..? ரேஷ்மா பேசியதில் இருந்தே யாரும் ஏதும் சொல்லவில்லை என்பது தெரிகிறது
...'யார்தான் பேசமுடியும்...என்ன பேசி ..என்ன ஆவதென்ன..?! ...இவ்வளவுநாள் நான் போட்ட திட்டத்திற்கு ,பட்ட கஷ்டத்திற்கு பலன் இதுதானா..?!'
ரேஷ்மா -வை பார்த்தாள்.ஆசைஆசையாய் குழந்தையை கையில் ஏந்தியபடி கொஞ்சி கொண்டு இருந்தாள்,ரேஷ்மா. கண்ணில் என்ன ஒரு தெளிவு ,கனவு..கையின் பிடிப்பில் என்ன ஒரு உறுதி...!!
ஆயாசமாக கண்ணை மூடி கொண்டாள்...மனதில் கட்டி வைத்திருந்த கோட்டை இடிந்திருந்தது..
'கர்ப்ப காலத்தில் No -16 நாளொன்றுக்கு நாலுமுறை வாந்தி எடுத்ததும்,'வயிறு ஏன் பெருசா இருக்கு ..' -னு புரியாது அழுததும் ,பிரசவ வேதனையும் அதில் அவள் பட்ட வலியும்...' அனைத்தும் மனதில் வந்து போனது.
'எப்படி பட்ட வலியாக இருந்திருந்தால், நினைவு திரும்பி இருக்கும்..செத்து பிழைத்து இருக்கிறாள்,ரேஷ்மா'...

ஜன்னலுக்கு வெளியே சூரியன் அஸ்தமித்து கொண்டு இருந்தான்...
ஒரு முனையில் அஸ்தமனம் என்றாள் மறுமுனையில் விடியல்...நிலவின் விடியல்.
இயற்கையின் குரல் கேட்டது...அது, அவளுள் மாற்றங்களை நிகழ்த்தியது.
மாறினாள்.
குழந்தைக்கான பொருட்களை கட்டிலில் வைத்துவிட்டு வெளியே வந்தாள்.
அலைபேசியில் நீலவேணியை அழைத்தாள்.
" சொல்லு ...ரோஹிணி .."
" மேடம் ..அந்த அட்ரஸ் சொல்லுங்க ..நாளைக்கே நானும் கிஷோரும் ஒரு குழந்தைய தத்து எடுக்க போறோம்"

-------------------------------------------------முற்றும் ---------------------------------------------------------

எழுதியவர் : கல்கிஷ் (9-Sep-14, 9:53 pm)
சேர்த்தது : kalkish
Tanglish : oru nilavin vidiyal
பார்வை : 968

மேலே