வராத வசந்த காலங்கள்

அவர்களுக்கு வயதாகி விட்டது. சிலர் கண் பார்வை குறைந்து , உடல் சுருங்கி , கால்கள் தள்ளாடி , முதுமையின் எல்லைக்கு மிக அருகில் இருந்தனர் . நாங்கள் அவர்களைத்தான் எதிர்பார்த்துக் காத்திருந்தோம். நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது . எங்கள் அழைப்பிற்கு இணங்க ஒவ்வொருவராய் வரத்துவங்கினர். நாங்கள் அனைவரும் சிரம் தாழ்த்தி கரம் கூப்பி கும்பிட்டு வணங்கி வரவேற்கிறோம். அவர்கள் முகத்தில் தான் எத்தனை மகிழ்ச்சி.!. சந்தோசம்!. பெருமிதம்!. எங்கள் கைகளை பற்றிக்கொண்டு நலம் விசாரிக்கின்றனர். கன்னம் தடவி வினவுகின்றனர். சிலருக்கு, சொன்னதும் எங்களை புரிந்தது. சிலருக்கு நினைவு படுத்த வேண்டி இருந்தது. சிலருடைய நினைவிலிருந்து சுத்தமாய் நாங்கள் அகன்று விட்டிருந்தோம். அவர்களை ச்சொல்லி குற்றமில்லை. எங்களை அவர்கள் பார்த்து 30 வருடங்களுக்கு மேல் ஆகி விட்டதே. எங்களுக்குத்தான் அவர்கள் ஒவ்வொருவரும் தனித்தவர்கள். அவர்களுக்கு அப்படி இல்லை. எங்களை போல ஒவ்வொரு வருடமும் எத்தனையோ பேர்.
மாடியில் இருக்கும் விழா கூடத்திற்கு , நடக்க முடியாதவர்களை, நாற்காலியில் அமர வைத்து என் நண்பர்கள் தூக்கி செல்கின்றனர். அன்றைய நிகழ்ச்சிக்கு அவர்கள் தான் முக்கிய பிரமுகர்கள்.
ரத்தம் சூடாக இருந்த அந்த காலத்தில் இவர்களை என்ன பாடுபடுத்தி இருக்கிறோம்.! எங்களுடைய சகித்து கொள்ள முடியாத வால் தனங்களை , குரங்கு சேட்டைகளை எல்லாம் கண்டும் காணாமல் போய் ஒரு தந்தையை போல , ஒரு தாயை போல அன்பு காட்டி , அடித்து திருத்தி , ஒழுங்கு செய்து வளர் பருவத்தில் இருந்த எங்களை தோளில் கை போட்டு நண்பர்களாய் பழகி , தாங்கள் கரைகளாய் இருந்து எங்களை நதிகளை போல நடத்தி இந்த சமூக கடலில் கலக்க வைத்தவர்களை ஒன்று சேர ஒரே மேடையில் கண்டது மீண்டும் அந்த பொற்காலத்திற்கே கொண்டு சென்றது.
நாங்கள் அந்த நினைவுகளின் துளிகளை அனைவரும் ருசிக்க , அருந்தத் தருகிறோம். அவர்களும் அதனையே அவர்களின் உரையாக கூறி பகிர்கிறார்கள். நாங்கள் வணங்கி நிற்கிறோம். அவர்கள் வாழ்த்துகிறார்கள். அன்று போலவே இன்றும் நாங்கள் நலமாய் வாழவே எண்ணி எங்களை மனமார வாழ்த்துகிறார்கள்.
உரைகள் முடிந்து நன்றிகள் கூறி அவர்களை உணவருந்த செய்து வாசல் வரை சென்று வழி அனுப்பி வைத்து,,, இனி இவர்களை எப்போது காண்போமோ என்று ஏக்கத்துடன் பிரிந்தோம்...
முன் கட்டுரை சுருக்கம் :
11 முதல் 17 வயது வரையிலான பள்ளி பருவமே எனக்கெல்லாம் பொற்காலம். கவலைகளை புறம் தள்ளி விட்டு வெறும் மகிழ்ச்சி பூக்களை மட்டுமே எண்ணம் முழுக்க நிரப்பிக்கொண்ட காலம் அது. புரட்டும் பொய்மையும் நிறைந்த சமூகத்தில், அதன் நிழல் கூட படாது தெளிந்து கிடந்த காலம். இலைகளே உதிராத வசந்தத்தின் நிறங்களை மட்டும் அணிந்து கொண்ட காலம் . அதற்கு பின் வந்த நாட்கள்.... வேண்டாம் .. நரகத்தின் சாயல் மிகுந்த , மீண்டும் நினைத்து கூட பார்க்க துணிவில்லாத அவலமான நாட்கள்.
புத்தகத்துள் வைத்த மயிலிறகு போல புத்திக்குள் பூட்டி வைத்து கொண்டு எப்போதாவது திறந்து பார்த்து, கடல் நீர் முத்தமிட்டு ஓடுகிற கரை மணலை போல ஈரமான, அந்த, இனி நினைத்தாலும் வராத காலங்களின் என் பள்ளி ஞாபகங்கள்தான் என்னை இன்னும் வாழ வைத்து கொண்டிருகின்றன. இன்று நான் 'இருக்கிறேன்' என்றால் என் அந்த கால நினைவுகளும் என் பள்ளி நண்பர்களும்தான் காரணம்.
( கடந்த ஆசிரியர் தினத்தன்று 1970 - 1974 ; 1975 - 1979 ; 1980 - 1987 வருடம் எங்கள் பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் இணைந்து எங்கள் பள்ளி காலத்தில் எங்களுக்கு அறிவூட்டிய குருக்களை வரவழைத்து மரியாதை செய்து ஆசி பெற்றோம். அந்த விழா நடந்த அந்த 3 மணி நேரமும் நாங்கள் எங்கள் நரை, திரை வயதெல்லாம் மறந்து மாணவர்களாகவே இருந்தோம்.
அது பற்றிய என் பதிவே இது.)
( இனி படியுங்கள் இன்னொரு முறை முதலில் இருந்து .... )

இவண் ( ன்)
கே.ரவிச்சந்திரன்

எழுதியவர் : (10-Sep-14, 3:38 pm)
சேர்த்தது : k.ravichandran
பார்வை : 745

சிறந்த கட்டுரைகள்

மேலே