பெண் கல்வியின் முக்கியத்துவம்

கல்வி கற்பது என்பது ஒவ்வொரு ஆண், பெண் இருவர் மீதுள்ள கட்டாயக் கடமையாகும். கல்வி ஒரு மனிதனை அறிவுடையவனாகவும், பண்பாடுள்ளவனாகவும், ஒழுக்கமுடையனாகவும் மாற்றுகிறது. கல்வி மனிதனின் அறிவுக்கண்ணைத் திறப்பதோடு சொத்துக்களிலெல்லாம் மிகச் சிறந்த சொத்தாகவும் கருதப்படுகிறது. கல்வியென்பது மார்க்கம் மற்றும் உலகம் பற்றிய அறிவைப் பெறுவதாகும்.

பெண் என்பவள் ஒரு குடும்பத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கிறாள். குறிப்பாக, தன்னுடைய குழந்தையின் அறிவு வளர்ச்சிக்கும் பண்பாட்டிற்கும் அடித்தளம் இடுபவளே பெண்ணாகிய தாய்தான். ஒரு குழந்தை முதலில் அறிமுகம் ஆவது தன் தாயாரிடம்தான் அந்தக் குழந்தைக்கு இரண்டு வருடங்கள் பாலூட்டுவதுடன் இறைபக்தியையும், நல்லொழுக்கத்தையும் சேர்த்தே ஊட்டுகிறாள்.

எனவே ஒவ்வொரு ஆண் பெண்ணுக்கும் முதல் பள்ளிக்கூடமாகவும் பாலகப்பருவ ஆசிரியையாகவும் திகழ்பவள் தாயாகிய பெண்தான். அந்தத் தாய்க்கு நல்ல அறிவும், கேள்வி ஞானமும் இருந்தால்தான் அவளிடம் பாடம் கற்கும் குழந்தைகளுக்கும் கிடைக்கும் என்பதைத்தான் "தாயைப் போல பிள்ளை நூலைப்போல சேலை" என்கிறார்கள். ஆகவே, அவளுக்கு கல்வியறிவும் கேள்வி ஞானமும் வேண்டுமென்றால் கல்வி மிக அவசியமாக இருக்கிறது.

1. ஒரு பெண் கல்வி கற்பதன் மூலம் அவள் தன்னை முதலில் திருத்திக் கொண்டு, மார்க்கம் அனுமதிக்காத அனாச்சாரங்களிலிருந்து தன்னை பாதுகாத்துக் கொள்கிறாள்.

2. தன் கணவனோடு எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை அவள் அறிந்து கொள்வதின் மூலம் குடும்பத்தில் ஏற்படும் அதிகபட்ச பிரச்சனைகள் தீர்ந்து சந்தோசமான குடும்ப சூழ்நிலைநிலை உருவாகி ஒரு ஆண் சமூகத்திற்கு செய்ய வேண்டிய கடைமைகளை சிறப்பாக செய்ய பெண் உதவியாக இருப்பாள்.

3. தன் உறவினர்களுடன் எப்படி நடந்து கொள்ள வேண்டுமோ அப்படி நடந்து உறவினர்களுக்கு மத்தியில் ஒருங்கிணைப்பை உருவாக்குவதன் மூலம் சமூகத்திலும் மறுமலர்ச்சி ஏற்பட வாய்ப்புள்ளது.

4. தன்னுடைய குழந்தைகளை முறையாக வளர்த்து அதன் மூலம் எதிர்கால சமுதாயம் உருவாகுவதில் அதிக பங்கு வகிக்கின்றார்கள்.

5. பெண்கள் தங்களது நியாயமான உரிமைகளைப் பெற்றுக் கொள்ள முடியும். பெண்களுக்கே உரிய அச்சம், மடம், ஞானம் ஆகிய சிறப்புக்கள் கல்வி அறிவால் மேலும் பலப்படும்.

பெண்களுக்கு கல்வியறிவு நிச்சயம் தேவை அது முழு சமுதாய முன்னேற்றத்திற்கு உதவும் என்பதை இஸ்லாம் பல நூற்றாண்டுகளாக இயம்பிக் கொண்டு இருக்கிறது. இச்செய்தியை அறியாதவர்களாக மக்கள் இன்றும் இருக்கின்றனர். இன்று பெண்கள் எப்படி எல்லாம் அலைக்கழிக்கப்படுகிறார்கள் என்றால் வரதட்சணை கொடுமை, அடக்குமுறை, பாலியல் துன்புறுத்தல்கள், சிறைக் கொடுமைகள் போன்று எத்தனை எத்தனையோ சுமைகளை சுமந்துக் கொண்டிருக்கிறார்கள். இவைகளிலிருந்து விடுபட்டு நம் நியாயமான கோரிக்கைகளைப் பெற கல்வி மிக மிக அவசியமானதாக இருக்கிறது.

எழுதியவர் : (10-Sep-14, 5:05 pm)
பார்வை : 23518

மேலே