அந்திமம்

நினைவுகளால் மட்டும் நிரம்பிக் கிடக்கும் பொழுதொன்று வரும். அப்போது துணைக்கு யாருமில்லா சூழல் ஒன்று யாதாய் நீ இருந்தாய் என்றொரு கேள்வியும் எழுப்பும்? இனிய கனவுகள் நிரம்பியவனவாய் யான் இருந்தேனோ? கொடுந்தீமைகள் நிறை அனுபவங்கள் சூழ வாழ்ந்தேனோ? உள்ளன யாவுமெனதென இறுமாந்திருந்தேனோ...? பொய்க்காதல் பேசித் திரிந்தேனோ....?சீறும் காமம் தலைக்கேறி மிருகமாய் கடைவாய் எச்சில் ஒழுக அலைந்தேனோ...?

யாதாய் இருந்தேன் யான்..? எதுவாய் ஆகும் அந்த யான்...?
சவுக்கின் சொடுக்காய் எழும் கேள்விகள்....
ஆள் அரவமற்ற தனிமைப் பொழுதுகள்...
என் செய்வேன் ... ? யானும் அப்பொழுதென் செய்வேன்...?
எனக்கு....

இனிய கவிகள் செய்தனவெல்லாம் தோன்றும்...,
பிழைத்திருந்ததும் தோன்றும் அதிலிருந்து பிழைத்து வந்ததும் தோன்றும்...,
வாசித்த புத்தகங்களின் பக்கங்களை எல்லாம் மீண்டும் புத்தி புரட்டிக் கொண்டிருக்கும்,
காதலென்ற பேருணர்வின் ரகசியமென்னவென்பது அப்போது விளங்கும்,
பேச்சற இருந்து பழகிய அனுபவம் எல்லாம் ஊன்று கோலாய் தனிமையைத் தாங்கிக் கொள்ளும்,

தேடித் திரிந்த பொழுதுகளின் அனுபவங்கள் எல்லாம்
வாயினோரம் ஒதுக்கிய பெருநெல்லிக் கனியென மெல்ல இனிக்கத் தொடங்க...
இனிய கனவுகளெல்லாம் தோன்றும்.....
இனி....
எப்போதென் உயிர் பிரியும் என்றேயென்னுள்ளம் எப்போதும் ஏங்கியேக் கிடக்கும்.....
அச்சுவைமிகு பொழுதே வா...!!!! கவின்மிகு நிகழ்வே விரைந்தே...நீ சடுதியில் வா...!


-தேவா சுப்பையா

எழுதியவர் : Dheva.S (10-Sep-14, 10:43 pm)
Tanglish : andhimam
பார்வை : 80

மேலே