பிள்ளை
அன்று எங்கள் கிராமத்தின் கதை சொல்லியான பிள்ளை வரவில்லை. தினமும் சாயங்காலம் ஆறு மணி வக்கீல் ஏதாவது ஒரு வீட்டுத் திண்ணையில் வந்து உட்கார்ந்து விடுவார் பிள்ளை.
நேற்று...சிறுவர்கள் எல்லாம் ஏழு மணி போல ஒவ்வொருவராக வர ஆரம்பித்து வந்து சேர்ந்த பின், ஒருவன் ஆரம்பித்தான்.
" பிள்ளை, இன்னைக்கு என்ன கதை?" .
" நேத்து பாதியில் நிறுத்தி விட்டு போயிட்டீங்களே, பார்வதி-பரம சிவன் கதை , அதை சொல்லுங்க"
" வேணாம், பிள்ளை. பேய்க் கதை சொல்லுங்க.."
"டேய். பொம்பிள பிள்ளைங்க இருக்காங்கன்னு அதுகள பயப்பட வைக்க சொல்றயா?"-பிள்ளை.
"அதெல்லாம் ஒண்ணும் பயம் கிடையாது.. நீங்க சொல்லுங்க பிள்ளை.."- செல்லம்மா.
கடைசியாக, பிள்ளை முடிவு செய்தவராய், கண்ணன் கதை சொல்ல ஆரம்பித்தார்.
மணி ஒன்பது.. சில பசங்க தூங்கியே விட்டார்கள். சிலர் பாதியில் அம்மாவின் அடிக்கு பயந்து கழண்டு போய் விட்டார்கள். மிஞ்சியது நான், செல்லம்மா, வடிவேல், குமார், மட்டும்தான்.
பிள்ளை எழுந்து கொண்டார். " அப்ப நான் கெளம்பறேன். "
குமார் வீட்டில் இருந்து அவருக்கு சாப்பாடு கொண்டு வந்து கொடுத்தான். அன்று அவன் வீட்டு சாப்பாடு..
இன்னைக்கு பிள்ளையை காணோம். பசங்க எல்லாருக்கும் கவலையாகி விட்டது.
" டேய்.. எங்கடா பிள்ளை" என்ற குமாரின் கேள்வியில் அழுகை எட்டிப் பார்த்தது.. கடந்த இரண்டு மாதங்களாக அந்த ஊருக்கு வந்து அவர்களுக்கு எல்லாம் கதை சொல்லி பகல் முழுதும் அய்யனார் கோயில் மண்டபத்தில் படுத்துக் கிடக்கும் அந்த நாற்பது வயது குழந்தையை காணவில்லை..
தூரத்தில் யாரோ இரண்டு வெளியூர் ஆட்கள் ஆல மரத்தடியில் உட்கார்ந்து இருப்பதை பார்த்த வடிவேல், " டேய், அவங்க யாருடா?" என்றான்.
கிட்ட போய் கேட்டார்கள். " யாருங்க நீங்க .. யாரு வீட்டுக்கு வந்திருக்கீங்க?" - குமார்.
அதில் உயரமான பெரியவர் " தம்பி.. இங்க கிருஷ்ண பிள்ளைன்னு ஒருத்தர் ரெண்டு மாசமா தங்கியிருந்தார்னு தகவல் கெடச்சு வந்தோம்.. அவரு வீட்ல கோவிச்சிக்கிட்டு வந்துட்டார். இங்க வந்து பார்த்தா ஒரு வாரமா அவர இங்க பார்க்கலன்னு சொல்றாங்க தம்பி.." என்றார்.
குமார், "என்னாத்துக்கு கோவிச்சிக்கிட்டு வந்துட்டாரு அவரு.." என்றான்.
கூட வந்திருந்தவர், தன் வாயை பொத்திகிட்டு அழுது கொண்டே " ஒண்ணுமில்லாத விஷயந்தான் தம்பி.. கலியாணமாகி நாலு வருஷத்துல மனைவியையும் ரெண்டு வயசு கொழந்தையையும் வெள்ளத்தில பறிகொடுத்த பாவிப்பய..பன்னெண்டு வருஷமா ஊர் ஊரா சுற்றி .. வந்து கடைசியா இங்க வந்து இருக்கான்னு கேள்வி பட்டு வந்தோம்.. நான் அவனோட அண்ணன் " என்றார்.
அப்போது சூறைக்காற்றும் அதன் பின் மழையும் பிடித்து கொள்ள, அய்யனார் கோயில் மண்டபத்தில் நாங்க எல்லோரும் போய் நின்று கொண்டோம்.
அங்கே.. " போய் வரட்டுமா.. பிள்ளைங்களா? - பிள்ளை. " என்று கரிக்கட்டியால் சுவற்றில் எழுதியிருந்ததை முதலில் பார்த்து கூவினான் வடிவேல்.
டெக்சாசின் சாலை ஒன்றில் நடந்து கொண்டிருந்த எனக்குள் இன்று ஏன் இந்த நினைவு வந்து வலி ஏற்படுத்திக் கொண்டு இருக்கிறது?.
.. அதுவும் முப்பது ஆண்டுகளுக்கு பிறகு..?
எங்கேதான் போனீர்கள் பிள்ளை?..