பாரதியின் கண்ணம்மா

கண்ணம்மா போல ஒரு பெண் கிடைப்பது மிகக் கடினம்தான். அதுவும் பாரதி போன்ற ஒருவன் கண்ணம்மா என்ற பெண் நிஜத்தில் உடன் இல்லாமல் எவ்வளவு துன்பப் பட்டிருப்பான் என்பதை எண்ணிப் பார்க்கும் போதே பெரும் வலியாய் இருக்கிறது. கண்ணமாவின் கற்பனையில்தான் பாரதி செல்லம்மாவின் கைப்பிடித்திருந்திருப்பான். பாவம் செல்லம்மா நொடிக்கொரு முறை திசை திரும்பும் ஏகாந்தக் கனவுகள் கொண்டப் பாரதியோடு அவள் எப்படித்தான் சகித்துக் கொண்டு வாழ்ந்தாளோ...? பாரதி ஒரு முரட்டு மதம் கொண்ட யானை. திபு திபுவென்று அவனைச் சூழ்ந்து கொள்ளும் உணர்வுக் குவியல்களுக்கு நடுவே அவன் மூழ்கித் திளைத்துக் கொண்டிருக்கையில் வீட்டில் அரிசி இருக்கிறதா.. இல்லையா? மிளகாய் எப்போது தீர்ந்து போனது...? வீட்டு வாடகை கொடுத்தோமா இல்லையா என்பதெல்லாம் அற்ப விசயங்களாய்த்தானே தோன்றும்...?
செல்லம்மாவால் பாரதியை எதிர்கொள்ளவே முடியவில்லை. பாரதி போன்ற மனிதன் இப்போது இருந்திருந்தால் சராசரி பெண்ணொருத்தி குடும்பம் நடத்தி குழந்தை பெற்றுக் கொண்டு சகித்துக் கிடந்திருப்பாள் என்றா நினைக்கிறீர்கள்? பாரதி போன்ற ஒருவனை மணம் முடித்த மூன்றாம் நாளே விவாகாரத்து செய்து விட்டு வேறு வேலை ஏதேனும் பார்க்கச் சென்றிருப்பாள் அவள், காரணம் இந்த உலகம் செல்லம்மாக்களால் நிறைந்தது. திருமணம், வாழ்க்கை, பொருளீட்டல், பிள்ளைகள், பின் அவர்களுக்கான சொத்து சேர்த்தல், சமூகத்தால் கட்டமைக்கப்பட்ட மானம், மரியாதை, எதிர் வீடு, பக்கத்து வீடு, சொந்த பந்தங்கள், விசேஷங்கள் இதற்குள் வாழ்ந்து தொலைக்க வேண்டிய நிர்ப்பந்தம் செல்லம்மாக்களுக்கு இருப்பதில் ஆச்சர்யமில்லைதான் என்றாலும் துரதிர்ஷ்டவசமாக பாரதிகள் அதற்கு சரிப்பட்டு வரமாட்டார்கள்.
மாதமாதம் சம்பளம் வாங்கி திட்டம் போட்டு செலவு செய்து சுற்றி இயங்கும் உலகத்தில் எவன் செத்தாலும் பிழைத்தாலும் ஒரு கவலையுமின்றி பக்கத்து வீட்டில் இழவு விழுந்திருந்தாலும் தன் உறக்கத்தைப் பற்றியும் தன் உணவைப் பற்றியும் மட்டுமே கவலைப்படும் செல்லப்பன்கள்தான் செல்லம்மாக்களுக்கு சரிப்பட்டு வருவார்கள். பாரதியால் செல்லம்மா மிகவும் சிரமப்பட்டது உண்மைதான். பாரதியை தனக்குப் பிடித்த செல்லப்பனாக மாற்ற முயன்று முயன்று அதில் தோல்வியுற்று அதனால் பாரதியைப் பிரிந்து பலநாட்கள் அவள் வாழ வேண்டியதாயும் இருந்தது. அவளைப் பொறுத்த வரைக்கும் அவளது வாழ்க்கை, பிள்ளைகள் குடும்பம் இது பற்றி கவலைப்படாத ஒரு பொறுப்பற்ற கணவன் தான் பாரதி. இந்த சமூகத்தின் முன்னால் பித்தம் தலைக்கேறிய பிழைக்கத் தெரியாத ஒரு மனிதன் பாரதி...அவ்வளவுதான்.
பாவம் பாரதி... அவன் வாழ்ந்து முடிக்கும் வரை அவனை சரியாய்ப் புரிந்து கொண்டு சமூக முன்னேற்றத்திற்கு மட்டும் பயன்பட்டுக் கொண்டிருந்த அந்த காட்டாற்றில் சிறு வாய்க்கால் வெட்டி லெளகீகமாய் பயன்படுத்திக் கொள்ளும் கண்ணமாவை அவன் கண்டிருக்கவே இல்லை. கண்ணமாவை பாரதி தன் கவிதைகளில் தேடினான். அவனுடைய முரட்டுக்காதலை அவளால் மட்டும்தான் எதிர்கொள்ள முடியும். அவனின் பித்து நிலையில் நிரம்பிக்கிடந்த பேரழகினை ரசித்து அவனை அணைத்து ஆசுவாசப்படுத்தி சமகாலத்தில் நிறுத்தி வைத்து பெரும்பயனை இன்னும் அதிகமாக அனைவருக்கு பெற்றுத் தந்திருப்பாள் கண்ணம்மா. பாரதியின் கவிதைகள் என்று இன்று நாம் படித்துக் கொண்டிருக்கும் எல்லாமே அவன் பேரறிவுக் கடலில் சிறுதுளிகள்தாம். அவன் புரட்சிக் கவிதைகளையும் பெண்ணடிமைப் பாடல்களையும், நாட்டு விடுதலைப் பாடல்களையும் படைத்துக் கொண்டிருந்த போது....அவன் வீட்டு அடுப்பில் பூனைகள் உறங்கிக் கொண்டிருந்தன.
பசித்த வயிறு பற்றிய கவலைகள் கிடையாது பாரதிக்கு அவன் கவலை எல்லாம் பசித்திருந்த அவன் கனவுகளைப் பற்றியதுதான். அடுத்த வேளை சோற்றுக்கு அவன் வழியில்லாமல் இருந்த போதுதான்....''வயிற்றுக்குச் சோறிடல் வேண்டும் இங்கு வாழும் மனிதர்க்கு எல்லாம்..." என்று எழுதினான்.
நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும்,
நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்,
திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால்
செம்மை மாதர் திறம்புவ தில்லையாம்...
என்று தனக்குள் இருந்த கண்ணமாவின் சாயலைத்தான் அவன் கவிதைகள் என்று படைத்து வைத்தான். கண்ணம்மாவை பாரதி தன்னுள் படைத்துக் கொண்டான். கற்பனையில் கண்ணம்மாவும் அவளின் மாசற்ற காதலும் இல்லாது போயிருந்திருந்தால் இன்னும் அவன் வாழ்க்கை சிரமப்பட்டிருக்கக் கூடும். புறத்தில் எங்கும் காண இயலாத லெளகீக கபடங்கள் அற்ற அவளை நல்ல உயிரே கண்ணமா என்று அதனால்தான் விளித்தான். அவள் யாரோ ஒரு கணவனுக்கு சராசரி மனைவியாக விரும்பாத புத்தம் புதுக் குணங்களும், அறிவும் நிரம்பிய புதுமைப் பெண். பாரதி செல்லம்மாவோடு வேண்டுமானால் குடும்பம் நடத்தி இருக்கலாம் ஆனால் கண்ணம்மாவோடு மட்டும்தான் வாழ்ந்தான். பாரதியின் காதல் எந்த வித எதிர்ப்பார்ப்புகளுமற்றது அதை நிஜத்தில் ஒரு சராசரிப்பெண்ணால் எதிர் கொள்ளவே முடியாது. நிஜத்தில் யாரோ ஒரு பெண் பாரதியின் காதலை எதிர்கொள்ளும் வாய்ப்பு பெற்றிருந்தாளேயானாள்அவள் மூர்ச்சையாகிப் போயிருப்பாள்.....
ஆனால்.....ஒரு கண்ணமா அதைச் சரியாக எதிர்கொள்வாள். அவளுக்குத் தெரியும் பாரதியின் கற்பனை வீச்சு எத்தகையது என்று...பாரதி கொடுக்க கொடுக்க வாங்கி நிரப்பிக்கொள்ளத் தெரிந்த அற்புதப் பெண் அவள். பாரதியால் கண்ணமாவிற்கு லெளகீகச் சங்கடங்கள் வந்திருக்கவே வந்திருக்காது. கண்ணம்மாவால் பாரயின் படைப்புலகம் இன்னமும் சிறப்பானதாய் வீரியமிக்கதாய் இருந்திருக்கும். பாரதி தன்னுடைய புறம், அகம் இரண்டிலும் சக்கரவர்த்தியாய் வாழ்ந்திருந்திருப்பான். பாரதியும் கண்ணம்மாவும் கணவன் மனைவியர் அல்லர். அவர்கள் காதலர்கள். கணவன் மனைவி என்ற நியதே காதலோடு வாழ்வதற்காக உண்டாக்கப்பட்டதுதான் என்னும் போது காதலோடு இருப்பவர்கள் கணவன் மனைவி என்று தங்களை அறிவித்துக் கொள்ளும் அவசியமற்றுப் போகிறார்கள்.
கண்ணமாவின் சுதந்திரமான சிந்தனையும் பேச்சும், உணர்வுமே பாரதியின் காதல். பாரதியின் கிளர்ந்தெழுந்த ஏகாந்த சிந்தனைதான் கண்ணம்மாவின் காதல். இரண்டு உயிர்கள் எதிர் எதிர் துருவங்களை வெவ்வேறு விருப்பங்களை ரசித்து ஏற்றுக் கொள்ளும் இடம் வெகு வசீகரமானது. ஆசை தீர கண்ணம்மாவைக் காதலித்து மோனத்தில் மூழ்கிக் கிடந்தான் பாரதி. அவனால் நேரத்திற்கு உண்ண முடியவில்லை, கண்களைத் திறந்து சமகாலத்திற்குள் ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியவில்லை, அப்படி இந்த லெளகீக உலகத்திற்குள் வர அவனுக்குப் பிடிக்கவும் இல்லை. வாழ்க்கையின் சமன்பாட்டுக்குள் வர முடியாமல் அவன் திணறிய போதெல்லாம்....கண்கள் மூடி....
சுட்டும் விழிச்சுடர் தான் - கண்ணம்மா !
சூரிய சந்திர ரோ ?
வட்டக் கரிய விழி, கண்ணம்மா !
வானக் கருமை கொல்லோ ?
பட்டுக் கருநீலப் - புடவை
பதித்த நல் வயிரம்
நட்ட நடு நிசியில் - தெரியும்
நட்சத்திரங்களடீ !
என்று கண்ணம்மாவிடம் பேசிக் கொண்டிருந்தான் பாரதி. கண்ணம்மா அவன் வாழ்க்கையில் நிஜமாய் உடனிருந்திருந்தால் அவன் வாழ்ந்த காலத்திலேயே அவனின் விண்ணதிரும் புகழ் என்னவென்று அறிந்து மரித்திருந்திருப்பான் பாரதி. பெரும் நீட்சியாய் புகழோடு அறிவோடு செழிப்பாய் சென்றிருக்க வேண்டிய பாரதியின் வாழ்க்கை எதார்த்தத்தில் கண்ணம்மாவின் துணையில்லாமல் போனதால் 39 வயதில் மரித்துப் போனது.
எத்தனையோ கனவுகளை தன்னுள் விதைத்து அதிலிருந்து விளைந்த ஓராயிரம் உணர்வுகளைப் பிழிந்து தமிழ்ச் சமூகத்தின் விசால பேரறிவுக்கு கொடுத்துச் சென்றிருக்கிறான் பாரதி. பாரதி வாழ்ந்த வாழ்க்கையினையும் யாராலும் இனி வாழ முடியாது அவன் புனைந்த கவிதைகளைப் போலவும் ஒருவனாலும் இனி புனைய முடியாது. பாரதியின் மரணம் இந்த லெளகீகச் சங்கடங்களிலிருந்து ஒரு மிகப்பெரிய விடுபடல்.
உடலால் நம்மை விட்டு நீங்கி இருந்தாலும் தன் ஏகாந்த கனவுலகில்...
கூடிப் பிரியாமலே ஓரி-ராவெலாம்
கொஞ்சிக் குலவி யங்கே
ஆடி விளை யாடியே,-உன்றன் மேனியை
ஆயிரங் கோடி முறை
நாடித் தழுவி மனக்-குறை தீர்ந்து நான்
நல்ல களி யெய்தியே
பாடிப் பரவசமாய்-நிற்கவே தவம்
பண்ணிய தில்லை யடி....
என்று கவிகள் பல பாடி தன் நித்யக் காதலியான கண்ணம்மாவுடன் என்றென்றும் ஜீவித்துக் கொண்டுதானிருப்பான் அந்த முண்டாசுக் கவி.
தேவா சுப்பையா...