மௌன வலி
மடிந்துவிட்ட உன் வார்த்தைகளால்
உயிர் பெறுகிறது மௌனமொழி
எதிர் வந்த இதயத்தை
எறும்பை நசுக்குவதுபோல்
நசுக்கி, பொசுக்கிவிட்டு
போய்க்கொண்டிருக்கிறாய் புகைவிடும்
ரயில்வண்டியாய் ........
வலிக்காமலே கொல்லும் வித்தையை
வரமாக எங்குபெற்றாய்?
வார்த்தைகளால் நிதம்
வதம் செய்யும் விதம்
உனக்கு மட்டும் எப்படி வாய்த்தது?
இமைகளை பிடித்துக்கொண்டு
விழிகளை உறங்கச் சொல்லும்
இரும்புக்கரம்
உன்மெய்யில் எப்படி
பொய்யாய் முளைத்தது ?
சுடும்வெயில் தீண்ட தீண்ட சுருங்கிப்போகும்
குறுநீர் கொண்ட குளமாய் நான்
கோடரிக் காம்பின் நாக்கீறல்களால்
கடலளவு காயங்களை
கண்ணீராய் சுமக்கிறேன்..........
உன் நேச மேகங்களால்
காயங்களை உறிஞ்சிக்கொண்டு
உன் மழை நீரினால் ஆற்றிவிடு
மாயங்களாய் மாற்றிவிடு.....
கவிதாயினி நிலாபாரதி