மந்தைகள்
நல்ல மேய்ப்பனில்லா
மந்தைகள்
மேய்ச்சலுக்கு ஆளில்லா விட்டாலும்
தனத்துக்குத் தானே மேய்ப்பனாகி
மேய்ந்து கொண்டுதானிருக்கிறது !
புல்லோ , முள்ளோ
காய்ந்த சருகுகளோ
கிடைப்பது உண்டு
தறி யறுத்து
துள்ளிப்பாயும் தந்திரங்க ளறிந்து
உணவிருக்கும் இடமறிந்து
பின்னர் -
பட்டினியில்லா மலிருப்பது மட்டுமே
மேய்ச்சலின் தாரக மந்திரமென்றறிந்து
அதன் வழியே சென்று
மேயதலறிந்து கொள்கின்றன
மந்தைகள் ...
பாதுகாப்பாய் பட்டியில்
அடைக்கின்ற மேய்ப்பனில்லா
மந்தைகள்
செல்லுமிடங்களி லெல்லாம்
துணை சேர்த்து
ஈணும் பருவமறியாது
குட்டியீணி -
கூட்டம் கூட்டமாய்
பல்கிப் பெறுகின்றன ...
நகரத்தில் கசாப்புக்கடைகளும்
கானகத்தில் நரிகளும் , ஓநாய்களும்
வாய்பிளந்து காத்திருக்கிற
கவலைகளின்றி திரிகின்ற
மேய்ச்சல்களுக்கு -
அகப்பட்டுக்கொண்ட பின்பு
திசை காட்டும் மேய்ப்பனின்
நீள்கோள் சூத்திரம்
நிஜமுணர்த்தும் .