பதறாமப் படுத்துறங்கு

(கணவன் மனைவி கைபேசி உரையாடல்)
பெண்:
பட்டுச்சேலை பண்டல் கட்டி
பக்கத்தூரு போனவரே - அங்க
எட்டு ஏழு சோலிக் கிடையில்
என் நினைப்பு இருந்திடுமா?
ஆண்:
பண்டல் பிரிச்சிப் போடும்போது
பக்கத்துல தோள் பிடிச்சு - நீ
கிண்டல் கேலி செய்வது போல்
கிறுக்குப் பிடிச்சி போகுதடி!
எனக்குள்ளே நான் சிரிச்சா
எங்கூட்டு சேக்காளி - அவன்
தனக்குள்ளே தான் சிரிச்சு
தலையில் அடிச்சுக் கிட்டாண்டி.!
வரி யாக வரியி ழைத்து
வாசக் கோலம் போட்டவளே - அடி!
சரியாகச் சாப்பிட்டியா?
சாமத்தோட தூங்கினியா?
பெண்:
எச்சில் வச்ச எள்ளு ருண்டை
எடுத்து தின்னப் பிடிக்குது!- நீரு
பிச்சிப் போட்ட நகம் தானே
பிறை நிலவாத் தெரியுது!
ஆண்:
அம்மன் கோயில் திருவிழா
ஆத்தைத் தாண்டி போறியா?- கூட
செம்பு மாமா துணை வருவார்,
சேதி சொல்லித் தேத்திடவா?
பெண்:
கைப்பிடிச்சி கூட்டிப் போனா
கண்மாய்த் தண்ணீ காஞ்சிடுமா?-அட
கைக்கெட்டும் சொந்த மெல்லாம்
கட்டினவன் போல் வருமா?
நக்கினாருத் தெரு முனையில்
நாசக்கார பெண்ணிருக்கா - அங்க
தப்பித் தவறிப் போகாதீர்!
தலை கீழா மாத்திடுவா..
ஆண்:
முக்கியமா ஒரு சேதி
முந்தித் தந்த முல்லையே - அந்த
நக்கினாரு வீட்டில் தங்கி
நாளை காலை வந்திரவா?
பெண்:
தொன்டு தொடுப்பு கொண்டு வந்தா
தொடப்பக்கட்டை பேசுமுங்க;-நீரு
தின்ன சோறு கிடைக்காம
தெருவில் நிக்க வேணுமுங்க!
ஆண்:
பத்ர காளி பெண்டாட்டியா
வாய்ச்சது என் பாக்கியந்தான்;
பத்திரமா திரும்பி வாரேன்
பதறாமப் படுத்துறங்கு!