How old r u
தோழியருக்கு வணக்கம்... ( அட... தோழர்களுக்கும்தான்)..
ஒரு திரைப்படம் பார்த்துவிட்டு விமர்சிப்பது...என்ற வார்த்தைக்கு இடமில்லாமல் பாராட்டுவது என்ற வார்த்தையை சேர்த்துக் கொள்ளலாம் என்ற முன்னுரையோடு தொடங்குகிறேன்..
"How old r u .?" என்னும் கேள்வியோடு தொடங்குகிறது இந்தப் படம். தொண்ணூறுகளின் கடைசியில் ஒரு அழகுப் பதுமையாக காதலித்துக்கொண்டு நம்மையும் மிக நாகரீகமாக காதலிக்கச் சொல்லி நிறம் கொடுத்தவர் மஞ்சு வாரியர்.. ஒரு குடும்பத் தலைவியாக " I am only 36 Sir " என்று பயந்து குறுகிச் சொல்லிக்கொண்டே வெளி வந்திருக்கிறார் இத்தனை வருடங்கள் கழித்து..
இன்னும் அதே நுணுக்கமான பாவனைகள்.. இவருக்கு இந்த கதாபாத்திரம் மிகக் கச்சிதமாக பொருந்தியிருக்கிறது.
படத்தின் கதை... ஒரு மத்தியதரக் குடும்பம்.. அயர்லாந்து நாட்டின் வேலைக்கு செல்வதை இலட்சியமாகக் கொண்டிருக்கும் கணவன் ராஜீவ். ஒரு அரசாங்க அலுவலகத்தில் வேலை செய்யும் மனைவியாக நிருபமா. தனது தந்தையின் வாழ்க்கை முறையை பின்பற்றி தூர தேசத்திற்கு சென்று படிக்கும் கனவுகளோடு மகள். லச்சு.... இவர்களின் இயல்பான வாழ்க்கையில் நிருபமாவின் பயந்த சுபாவத்தைக் கண்டு சுற்றத்தார் அனைவரின் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாகும் ராஜீவும்.. லச்சுவும்...
நிருபமாவிடம் தங்களுடைய புழுக்கத்தை கொட்டுகின்றனர்.
ஒருநாள் இந்திய குடியரசுத் தலைவரிடம் இருந்து நிருபமாவிற்கு அழைப்பு வருகிறது. காரணம் லச்சு தான் பள்ளியில் படிக்கும் போது அவரிடம் தான் கேட்ட கேள்விக்கு பாராட்ட அதன் மூல காரணம் தனது அம்மாதான் என்று. அந்தக் கேள்வி என்னவென்று மறந்துவிட்ட நிலையில் குடியரசுத்தலைவரை காணச் செல்லும் நிருபமா பதட்டத்தில் மயங்கி விழ... அதனை சமூக வலைத்தளங்களில் எல்லோரும் கிண்டல் செய்யா.. இதனிடையில் ராஜீவும் லச்சுவும் அயர்லாந்து பயணமாகிறார்கள். தனிமையில் இருக்கும் நிருபமா தான் எதாவது சாதிக்க வேண்டும் என்று தொடங்கும் சாதனைப் பயணம்தான் படத்தின் இரண்டாம் பாதி...
நிருபமா... மீண்டும் மஞ்சு வாரியர் நிரூபித்திருக்கிறார்.. அவ்வளவு ஒரு நேர்த்தியான நடிப்பு. தான் தன்னுடைய இயலாமை கண்டு தன்மேல் சுய பரிதாபம் கொள்வதிலும்.. கணவரிடம் தன்னை நிரூபிக்க முயல்வதிலும்.. இ மகளின் உதாசீனம் கண்டு மருகுவதிலும் அருமையான உணர்வுகளை வெளிக் கொணர்ந்திருக்கிறார். கூடவே ராஜீவாக குஞ்சாக போபன். இவரும் சவாலான கதா பாத்திரம் ஏற்று நடித்திருக்கிறார். இவரைப்போல் எத்தனை முன்னணிக் கதா நாயகர்கள் தமிழ் நாட்டில் இன்று இம்மாதிரியான கதா பாத்திரங்களுக்கு ஒத்துக்கொள்வார்கள் எனத் தெரியவில்லை.
படத்தின் இயக்குனர் ரோஷன் ஆண்ட்ரூஸ்... இவ்வளவு அழகான அற்புதமான கருவை இயல்பாக கொஞ்சம் கூட நெருடாமல் கொண்டு சென்றிருக்கிறார். படத்தின் கரு இயற்கை விவசாயம். நாம் எல்லவரும் மறந்து போய்விட்ட ஒரு விஷயம்... ஒரு பெண் முன்னின்று எவ்வளவு திறமையாக செய்து தன்னை நிரூபிக்கிறார் என்று தெளிவான நீரோடை போல் திரைக்கதை அமைத்திருக்கிறார்.
படத்தில்... சுமோக்கள் பறக்கவில்லை... அரிவாள்கள் ரத்தம் சுவைக்க வில்லை... கதாநாயகர்கள் சவால் விடவில்லை... விரசமான நகைச்சுவை இல்லை... படம் முழுவதும் தன்னம்பிக்கை.... தன்னம்பிக்கை.. குறிப்பாக பெண்களுக்கு. திருமணம் ஆன பெண்களுக்கு தனக்கென கனவு இருக்கக்கூடாதா..? இருக்கலாம்... கண்டிப்பாக வேண்டும் அந்தக் கனவு ஒரு நல்ல நோக்கத்தை பற்றியதாக இருக்க வேண்டும் என்று அழகாக சொல்லியிருக்கிறார் இயக்குனர்.
இந்தப் படம் பார்த்துவிட்டு ஹஹ்ஹஹஹ் இதெல்லாம் நடக்குற கதையா..? ன்னு யாரவது கேட்டா... ஏன் நடக்கக் கூடாதான்னு பெண்கள் கேப்பாங்க தங்களோட முத்திரை பதித்து... அனைவரும் காண வேண்டிய படம்.