பத்தாம் வகுப்பும் மாலை செய்தியும்
அன்றைய எட்டு
மணிச் செய்திகளில்
சொல்லியிருப்பர்கள்
நாளை தேர்வு
முடிவுகளென்று....
இரவுக்கூடலில்
வழக்கத்திற்கு மாறான
கூடுதல் பீடிப்புகை
இதயத்திடம் இரட்டைக்கிளவி
கற்றுத்
திரும்பியிருக்கும் ...
தடதட.....! படபட...!!
சென்னைக்கோ
திருப்பூருக்கோ எவ்வழித்தடம்
சிறந்ததென
விவாதம் தொடங்கியிருக்கும்
வீரர்களுக்குள்....
கூட்டத்தில் கோழைகள்
டுடோரியல்களின்
முகவரி சொல்லிக்கொண்டிருப்பர்
இதுசரி... அதுதவறென்று....!!
அப்படியே கூட்டம்
இடம் பெயர்ந்திருக்கும்
திருவிழாக்களின் இன்னிசை
கச்சேரிகளுக்கு...
சில்லறைகளோடு
ரிசல்ட்டுக்காய் காத்திருப்போர்
சங்கமென....
விருப்பப்பாடல்களுக்கு
பரிசு கொடுத்து
வாழ்த்தக் கேட்டிருக்கும்.....
அம்மா அழைத்தும்....
அப்பா உதைத்தும்....மணிநாய்
கால்நக்கியும்
நண்பகல்வரை எழத்
தோணியிருக்காது........!!
ஒருவழியாய்
பன்னிரண்டு மணிக்கு
இடறி இடறி
எனக்கான ஆறு இலக்கங்கள்
கண்டதும்...
தெய்வமாகி
சுருண்டுகொள்ளும் அன்றைய
மாலை செய்தித்தாள்...
அடுத்த தெருநோக்கி
நானும்.. என்னைப்போலவே
அவனும்...
நடுத்தெருவில் கால்சட்டை
இறுக்கிய தொடைதட்டி
"மாப்ள.... சாதிச்சிடோம்டா.."
வெற்றிக் கூச்சல்களினூடே
காதோரம் கிசுகிசுப்பான்..
"டேய்.. அவளும் பாசாம்டா"
அழகாய்த் தானிருந்தது
அவசரங்களற்ற
வெற்றிகளும்... அதைக்
கொண்டுவந்திருந்த
மாலைச் செய்தித் தாள்களும்....
கரு கொடுத்த தோழர். ராம் வசந்த் அவர்களுக்கு நன்றி...!!!