தோசையில் ஓட்டை விழுவது ஏன்---சிறுகதை
அப்பா ! இன்னுமா இவன் சாப்பிட்டு முடிக்கல?..." என்று குரல் கொடுத்துக்கொண்டே வீட்டினுள் நுழைந்தாள் ரஞ்சனி.
“மேடம் விளையாடப் போய்ட்டு வீட்டுக்குள் நுழையும்போதே
சாப்பாடு தயாரா இருக்கணுமோ?” என்று அக்காவை வம்புக்கு
இழுத்தான் தம்பி கவின்.
“டேய் இப்ப சாப்பிடறது பத்தா அல்லது பதினைந்தாவது தோசையடா? சீக்கிரம் எந்திரிடா. மத்தவங்களும் சாப்பிடணும்” என்று பதில் சொன்னாள் ரஞ்சனி.
“நீ போய்க் குளிச்சிட்டு வாம்மா. உடனே உனக்குத் தோசை சுட்டு தர்றேன” என்று சமையலறையில் இருந்து குரல் கொடுத்தார் அப்பா.
வீட்டினுள் நடக்கும் உரையாடல் களைக் கேட்டுச் சிரித்தபடியே வெளியே வராண்டாவில் அமர்ந்து அன்றைய செய்தித்தாள்களைப் படித்துக் கொண்டிருந்தார் அம்மா. அடுத்த நாள் தன் மாணவர்களுக்குப் புதிதாக எதைச் சொல்லலாம் என்று யோசித்துக்கொண்டிருந்த அவர்தான் நிலா டீச்சர்.
சற்று நேரத்துக்கெல்லாம் குளித்து விட்டுச் சமையலறையை நோக்கி ஓடினாள் ரஞ்சனி. போகும் போதே தம்பியைப் பார்த்து, "போதும் எந்திரிடா" என்று மீண்டும் சீண்டினாள்.
சமையலறையில் தட்டை எடுத்துக்கொண்டு தயாராக நின்றாள் ரஞ்சனி. அப்பா தோசை மாவை எடுத்துத் தோசைக் கல்லில் ஊற்றினார். `சுர்ர்ர்... ' என்ற சப்தத்துடன் தோசை வேக ஆரம்பித்தது. அப்பா சுட்டு தரும் ருசியான மொறுமொறு தோசைக்காக ஆவலுடன் தோசைக் கல்லைப் பார்த்தபடியே நின்றாள் ரஞ்சனி.
தோசைக் கல்லில் வேகத் தொடங்கிய தோசை மாவில் ஆங்காங்கே சிறு சிறு பொத்தல்கள் விழுந்தன. தோசைக் கல்லில் வேகும் தோசை மாவில் ஏன் ஆங்காங்கே பொத்தல்கள் விழுகின்றன என்ற கேள்வி ரஞ்சனியை குடைய ஆரம் பித்தது. உடனே அது பற்றி அப்பாவிடம் கேட்டாள்.
"ஏய் தோசை வெந்துட்டா, தட்டுல வைச்சு தின்னுட்டு போக வேண்டியதுதானே. தோசையிலே பொத்தல் விழுந்தா உனக்கு என்னா, விழுகாட்டா என்ன" என்று மீண்டும் கிண்டலடித்தான் கவின்.
"ரஞ்சனி தோசையை எடுத்துட்டு இங்கே வா. நான் சொல்றேன்" என்று வெளியிலிருந்து குரல் கொடுத்த அம்மா வீட்டுக்குள் வந்தார்.
“டீச்சரம்மாகிட்டேகேட்கிறத, என்கிட்ட கேட்குறியே” என்று கூறிக் கொண்டே ரஞ்சனியின் தட்டில் மொறுமொறு தோசையைப் போட்டார் அப்பா.
தோசைத் தட்டுடன் சென்று அம்மாவின் முன் உட்கார்ந்தாள் ரஞ்சனி. அதற்குள் சாப்பாட்டை முடித்திருந்த கவினும் அங்கு வந்தான். தோசை சுடும் வேலையைச் சற்று நேரம் நிறுத்திவிட்டு அப்பாவும் அங்கு ஆஜரானார்.
"சொல்லும்மா" என்று தொடங்கினாள் ரஞ்சனி.
"அரிசி மாவையும், உளுந்து மாவையும் அரைத்து ஒன்றாகக் கரைத்த பின் நொதித்தல் என்ற வினை அங்கே தொடங்குகிறது. ஈஸ்ட்கள் என்ற பூஞ்சைகளும், சில வகை பாக்டீரியாக்களும் இந்த வினைக்குக் காரணமாக உள்ளன. அப்போது கார்பன்-டை-ஆக்சைடு வாயு உருவாகிறது.
தோசை மாவை தோசைக் கல்லில் ஊற்றியவுடன், ஏற்கெனவே அதிகச் சூட்டில் இருக்கும் தோசைக் கல்லின் வெப்பம் காரணமாகக் கார்பன்-டை-ஆக்சைடு மற்றும் மாவினுள் உள்ள காற்று மிக வேகமாக வெப்பமடைந்து வெளியேறுகிறது. மேலும், மாவினுள் உள்ள தண்ணீரும் வெப்பத்தால் ஆவியாகி வெளியேறுகிறது. அவ்வாறு நீரும், வாயுக்களும் மாவின் மேல் பகுதியை உடைத்துக்கொண்டு ஆவியாக வெளியேறும் பகுதிகளில்தான் தோசையில் பொத்தல்கள் தோன்றுகின்றன" என்று சொல்லி முடித்தார் நிலா டீச்சர்.
"ஆகா... ஒரு தோசைக்குள் இவ்வளவு விஞ்ஞானமா?" என்று வியப்போடு கேட்டான் கவின்.
"தோசைக்குள் மட்டுமல்ல. நம் அன்றாட வாழ்வில் ஏராளமான நிகழ்வுகளைப் பார்க்கிறோம். ஒவ்வொரு நிகழ்வுக்குமான காரணங்களை நாம் தேட முற்பட்டால் விஞ்ஞான அறிவு நம்மிடையே நிச்சயம் பெருகும்" என்றார் அம்மா.
அப்பா சுட்டுத் தந்த மொறுமொறு தோசையின் ருசியோடு, அம்மா அளித்த தோசையின் பொத்தலுக்கான விளக்கத்தால் கூடுதல் திருப்தி அடைந்த ரஞ்சனி, அடுத்த தோசைக்காக அப்பாவைத் தள்ளிக்கொண்டு சமையலறை பக்கம் போனாள்.