விழுந்தேன் மழைத்துளியாக

விழுந்தேன் மழைத்துளியாக...
****************************************

நெல்மணிகள் முற்றித் தழைக்க - சின்னக்
கண்மணிகள் கப்பல்விட்டு களிக்க
விழுந்தேன் மழைத்துளியாக - நான்
விழுந்தேன் உயிர்த்துளியாக...

உன்னுயிர் என்றும் நிலைக்க - இந்த
உலகம் வளம்கொண்டு செழிக்க
விழுந்தேன் உயிர்த்துளியாக - நான்
விழுந்தேன் உயிர்த்துளியாக...

மயில்களும் நடனங்கள் ஆட
பசும்புல் தின்று கால்நடைகள் கூட
விழுந்தேன் மழைத்துளியாக - நான்
விழுந்தேன் உயிர்த்துளியாக...

பறவைகள் சிறகுகள் விரிக்க - அதன்
பட்டாளம் மகிழ்ச்சியில் பறக்க
மலர்களின் நறுமணம் துளைக்க - அதன்
அதன் அருகினில் தும்பிகள் மிதக்க
விழுந்தேன் மழைத்துளியாக...

உலகம் என்றும் நிலைக்க
உயிர்நாடிகள் அடங்காதிருக்க
சிற்றுயிர் பேருயிர் எல்லாம்
எனக்காய் தவம்கொண்டு கிடக்க - நான்
விழுந்தேன் மழைத்துளியாக...

ஏரிகள் குளங்களை நிரப்ப
மதகுகள் கிணறுகள் தளும்ப
ஆறுகள் ஓடைகள் பெருக
விழுந்தேன் மழைத்துளியாக...

உலகத்தின் தாகம் தீர்த்து
உயிரினம் என்றும் காத்து
இருப்பதே எனதுக் கடமை;
விழுந்தேன் மழைத்துளியாக...

என் தந்தை சூரியன் காக்க
என் தாய் மேகம் அணைக்க
என் காதலன் காற்று தழுவ
விழுந்தேன் மழைத்துளியாக - நான்
விழுந்தேன் உங்களுக்காக...!!!

இந்த கவிதை எழுத உதவிய
என் இனிய நண்பருக்கு நன்றிகள் பல.........

என்றும் அன்புடன்

எழுதியவர் : சேதுராமலிங்கம்.உ (19-Sep-14, 1:55 pm)
பார்வை : 64

மேலே