பாரதி பற்றிய கவிதை

பாரதி பற்றிய கவிதை

பாரதி இன்று நீ இருந்தால்...?

பாரதி இன்று நீ இருந்தால்? - என்பது தலைப்பு
இந்தத் தலைப்பே ஒரு வியப்பு!
இன்று இருக்கின்ற பாரதியை
இருந்தால்? - என வினவுவதால்
ஏற்பட்டுள்ள திகைப்பு
இன்று மட்டுமா?
என்றுமே பாரதி நீ
இருப்பாய் நிலைத்து!
என்பதே என் நினைப்பு!

பாரதி நீ படைத்துள்ள கவிதைகளில் எல்லாம்
நீ வாழ்ந்து கொண்டிருக்கிறாய்!
குயில் பாட்டில் நீ...
குயிலாகக் கூவிக் கொண்டிருக்கிறாய்!
கண்ணன் பாட்டில் நீ...
வண்ணங்காட்டி ஆடிப்பாடிக்
கூத்தாடிக் கொண்டிருக்கிறாய்!
சுயசரிதையில் நீ ஓர் அக்கினிக் குஞ்சி!
பாஞ்சாலி சபதத்தில் நீ படர்ந்தெழும் காட்டுத் தீ!
வசனக் கவிதையில் நீ உலவும் தென்றல்!
உரைநடையில் நீ ஒளிரும் தென்றல்
இப்படிப் பலவாக வாழ்பவன் நீ!
பலமாகவும் வாழ்பவன் நீ!
கவிதைச் சட்டங்களைச் சமுதாயத்திற்கு வழங்கிய நீ
கண்ணாடிச் சட்டத்திற்குள் படமாகவும் வாழ்கிறாய்!
சென்னையில் கடற்கரைச் சிலையாகவும் நிற்கிறாய்!
இத்தனை வடிவில் நீ இருந்த போதும்
வரிசையில் நின்று - ரேஷன் பொருள்கள் வாங்கவும்
தேர்தல்களில் வாக்காளனாக வாக்களிக்கவும்
இயலாதவனாக நீ இருக்கிறாய்;
சட்டத்தைத் தாண்டும் சராசரி மனிதன் போல்
கண்ணாடிச் சட்டத்தைத்
தாண்டி வரும் மனிதனாய் நீ இல்லை

மலருடன் பொருந்திய மணம் போல்
விளக்குடன் இணைந்த ஒளி போல்
உடலும் உயிரும் பொருந்த
உலகில் நீ இன்று இருந்தால்
என்ன நடக்கும்?
உலகம் நடக்கும்!
நீ இல்லாத இப்போது நடக்கும் எல்லாமும்
நீ இருக்கும்போதும் நடக்கும்!
இன்றைய உலக நடப்புகள் கண்டு
நின் உள்ளம்
துடிக்கலாம் - வெடிக்கலாம்
பெருமகிழ்வால் களிக்கலாம்
பெருமிதத்தில் குளிக்கலாம்
எல்லாம் நடக்கும் என்பதே உண்மை!

“சாதிகள் இல்லையடி பாப்பா”
என பாரதி நீ; பாடினாய்
குழந்தைகளும் சிறுவர்களுமாகிய பாப்பாக்கள்
நீ பாடியதற்கு முன்னும் - பின்னும்
சாதி பற்றி அறியாதவர்களாகவே இருந்தார்கள்
இன்றும் அப்படியே இருக்கிறார்கள்!
எனவே; உணர்தத் தேவையற்ற குழநதைகள் மூலம்
பெரியவர்களுக்கு நீ உணர்த்த விரும்பிய
சாதி ஒழிப்பைப் பெரியவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை
சாதி வெறியையே நம்மக்கள்
சாதனையாகச் சாதித்துக் கொண்டுள்ளார்கள்!
ஆயிரம் உண்டிங்கு சாதி - எனில்
அந்நியர் வந்திங்கு புகல் என்ன நீதி? என்று பாரதி
நீ வினவியவாறே
புகுந்திருந்த அந்நியர் வெளியேறி விட்டனர்!
ஆனால்;
ஆயிரம் சாதிகள் மட்டும் அப்படியே இருக்கின்றன;
இல்லை இல்லை - அதிகரித்திருக்கின்றன
எனவே பாரதி நீ இன்றிருந்தால்...
சாதியைத் தூக்கி எறியுங்கள் எனச் சொல்வாய்!
சாதியைத் தூக்கி எறிவதற்குப் பதிலாக நம் மக்கள்
பாரதியே; உன்னையே தூக்கி எறிந்திருப்பார்கள்!

வருந்தாதே பாரதி; நீ
விரும்பியவாறு உரைக்கும் திறன் எனக்கில்லை!
உண்மை என நான் உணர்ந்தபடி கூறுகின்றேன்
உள்ளபடி கூறுகின்றேன்!
சாதியின் பின்னணியில்தான் அரசியல்
சாதியின் அடிப்படையில்தான் தேர்தல்கள் - என்னும்
பலமான இருக்கையில் சாதி இருப்பதால்
சாதியுடன் மோதுபவர்கள் சிதறிப் போவார்கள்!
சாதி சிதறாது!

பாரதி; நீ
மதநல்லிணக்கம்
மலர வேண்டுமென
விரும்பினாய்; ஆனால் - இன்று
நாடெங்கும் மதத் தீ ஆங்காங்கே
பற்றி எரிகிறது! - பாரதத்தின்
பெருமை சரிகிறது!

மதவெறி நெருப்பை நல்லிணக்க நீர் ஊற்றி
அணைக்க விரும்பாத அரசியல் சுருட்டர்கள் - மதத்
தீயில் - தம் வாயில் உள்ள
சுருட்டுகளைப் பற்ற வைத்துக் கொள்கின்றனர்!
எனவே; பாரதி நீ இன்றிருந்தால்
மதவெறி வன்முறை
உன்னையும் அழிக்க முனைந்திருக்கும்!
இதுகண்டு; நின் மனம்
துடித்துச் சினந்திருக்கும் - கண்கள் வீரமுடன்
வெந்திருக்கும்
என்ன செய்வது பாரதி?
சினங்கொள்வது மட்டுமே உன்னால் முடிந்த செயல்!
உன்னைத் தாக்க வரும் மதவெறியோ கொடிய புயல்!

ஆண்களோடு பெண்களும் சரிநிகர் சமானமாக
வாழவேண்டும் இந்த நாட்டில் - என நீ எழுதி வைத்தாய்
ஏட்டில்’ - இன்று
கல்வியில் பெண்கள் முன்னேற்றம்
கலைகளில் பெண்கள் ஈடுபாடு
காவல்துறையில் மகளிர்
ஆட்சித்துறையில் நிதித்துறையில்
அனைத்துத் துறைகளிலும் பெண்கள்
ஆண்களுக்கு நிகராக... இல்லை இல்லை
ஆண்களுக்கு மேலாகப் பெண்கள் விளங்குவதால்
பாரதி நீ இன்றிருந்தால்;
பெண்கள் முன்னேற்றம் நின் கவிதை விளைத்த வெற்றி
எனச் சொந்தம் கொண்டாடியிருப்பாய்’
பெண்கள் தம் சாதனைகளைப் போற்றிக் கொண்டாடியிருப்பாய்!
ஆனாலும்;
ஆங்காங்கே பெண் சிசுக் கொலைகள் எனும்
தீங்கறிந்து நடுங்கியிருப்பாய் - உள்ளம்
‘முடங்கியிருப்பாய்!

வங்கத்தில் ஓடி வரும் நீரின் மிகையால்
மையத்து நாடுகளில் பயிர் செய்வோம் என்று
நதிநீர் இணைப்புக்குக் குரல் கொடுத்தவனே!
நீ இன்றிருந்தால்;
வங்கத்தில் வெள்ளம்! தென்பகுதியில் தண்ணீர்ப் பஞ்சம்
என்னும் நிலை இன்னும் மாறவில்லையே! துயர்
தீரவில்லையே எனக் கூறிடுவாய் - நதி நீர்
இணைப்புக்குப் போரிடுவாய்!

கர்நாடகம் தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் தராமல் நடத்தும்
துர்நாடகக் காட்சிகள் உன்னைத் துடிக்கச் செய்திருக்கும்!
எரிமலையாய் வெடிக்கச் செய்திருக்கும்!

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு! என்றவனே!
இன்று நாடெங்கும் ஒற்றுமை உணர்வு
குறைந்து வருவதும்; வன்முறை நிகழ்வுகள்
நிறைந்து வருவதும்
பாரதி நீ இன்று பார்த்துத் துடித்திருப்பாய்! - கண்ணீர்
வடித்திருப்பாய்!

எத்தனை இடர்கள் சூழ்ந்த போதிலும்
இந்திய நாடு;
கல்வித்துறையில்; கணினித்துறையில்;
மருத்துவத்துறையில்; வானியல் துறையில் - என
எல்லாத் துறைகளிலும் ஓங்கிடும்
வல்லரசாக வளர்வதை நீ இன்றிருந்து பார்த்தால்
இதயம் மகிழ்ந்திருப்பாய்!
இவற்றுக்கெல்லாம் காரணமான நம்
இளைஞரைப் புகழ்ந்திருப்பாய்!

பாரதி நீ இன்றிருந்தால் பாரத அரசு
விடுதலைப் போர்வீரர்களுக்கு வழங்கும்
விருது - உதவித் தொகை இவற்றை
வேண்டாவென மறுத்து மேலும் ஓர் தியாகம்
செய்த தியாகியாய் சிறந்திருப்பாய் - தன்னலம்
துறந்திருப்பாய்!

தமிழுக்குச் செம்மொழி என்னும்
சிறப்புக் கிடைத்தது எண்ணி; பாரதி நீ
மகிழ்ச்சிக் கூத்தாடியிருப்பாய்!
எழுச்சிப்பா; பாடியிருப்பாய்
கோவைச் செம்மொழி மாநாட்டிற்கு வந்து
கவியரங்கத் தலைவரெனக் கவிதை
படித்திருப்பாய்! தமிழக முதல்வரைப் போற்றிக்
கவிதை வடித்திருப்பாய்!

செம்மொழி மாநாட்டுக்குச் சிறப்புடன்
வந்த தமிழறிஞர்களை; சிங்கப்பூர்; மலேசியா
போன்ற அயல்நாட்டுத் தமிழ் அறிஞர்களை
அனைவரையும் கட்டிப் பிடித்துக் களித்திருப்பாய்!
பலே! பாண்டியா! என்று அனைவரையும் விளித்திருப்பாய்!

பாரதி நீ இன்றிருந்தால்
தீயவற்றைத் தீய்க்கின்ற தீயாய்;
தூயவற்றைக் காக்கின்ற தாயாய்;
விளங்கியிருப்பாய்! - புகழால்
துவங்கியிருப்பாய்!

-முனைவர்.மா.தியாகராஜன், சிங்கப்பூர்.

எழுதியவர் : முனைவர்.மா.தியாகராஜன், சிங (19-Sep-14, 5:34 pm)
பார்வை : 7301

மேலே