அத்தை என்னும் அத்தாய்

உதடு மடித்த
ம்மா... ம்மா... க்களுக்கு
அடுத்தபடியாய்
நான்
நாக்கு சுழற்றியிருந்தது
த்தே..த்தே...
என்றுதானாம்.....!!
இன்னும்... ஒவ்வொரு
பொங்கல்
வரிசைகளின் போதும்
பிறந்தகப் பெருமை
பேசிக்கொண்டிருக்கும்
அத்தை...!!!
புதுமண நாட்களில்
மாமாவைத் தள்ளிவிட்டு
அழுதுகொண்டே நான்
அத்தைக்குப்
பக்கதிலமர்ந்ததை
அழுதுகொண்டே
பகிர்ந்து கொண்டிருக்கும் ....
அத்தை....!!!
சில்மிஷங்களை அறிந்திரா
வயதில்...
நானிருப்பதை
கண்களால் மொழிந்து
மாமாவைத்
தள்ளியிருக்கச் சொல்லியிருக்கும்
அத்தை...!!
அண்ணே மயன்
அண்ணே மாதிரியாம்
...அத்தைக்கு....!!
அவங்கப்பனைப் போலிருக்கேன்னு
அள்ளிக் கொஞ்சும்
அத்தைக்கு....
அப்பாவிற்குப் பின்
எங்கப்பனைப்
போலவே ஆகிவிட்டிருந்தேன்.... !!
இன்றும் கூட.....
குழம்பூற்றிக் கொண்டே
கேட்டிருந்தது..... அத்தை...!!
"அண்ணே மயனுக்குத்தே
எம்மவள கண்ணு தெரியல...
எப்பிடி வச்சிருக்காளாம்
சீமைக்காரி.....
எம்பவுனுப் புள்ளைய.....??
குழம்பு வாசதிற்கிடையில்
பாஸ்தாவும் வந்துபோக..
கலங்கிய கண்களுக்கு
முள் மாட்டிக்
கொண்டதாய்
காரணம் சொல்லி
சமாளித்திருந்தேன்....!!!
புழக்கடை சென்று
பாத்திரம்
கீழே தள்ளி...
மௌனமாய் அழுது
கோபம் தீர்த்துக் கொண்டது
அத்தை....!!!