தீராக்காதல் - டைரி

தீராக்காதல் - (டைரி)
===================

ஹோ இதற்காகவேதான் காத்திருந்தாய் போல்
சற்றேக்கூட கவனியாமல்
யாருடனேயோ
ஜாடைபேசித் திரியும்
உன் ஒப்பனைகளைக் காணும்போது
முகம் கோணுகிறேன் :(
ஆம்
என் முன்னே நீ ஒருவரையும்
சிலாகித்துவிடலாகா
அப்பொழுதே
அழ இடம் தேடுகிறது
என் அரைக்கால் சட்டை சிறுமனம்

உனக்குத் தெரியாதா
இலை சுருட்டி ஊதிவிடும்
விஷ முட்களின் எய்யல்போல்
என் குத்தலான வசையலைகளை
உன் பார்வையால்
நீந்திக்கிழித்து அதர்செய்து
என் மார்பை அடைந்துவிடும் முதிர்வுடைய
அக்கருங்குவளை கண்காரி
நீ ஒருத்திமட்டுந்தான் என்று

எனக்குள்ளே இரவு பகல் உதித்துமூடும்
மனிதமிருக பரிணாமங்களை
சமநிலைப்படுத்தும்
தனித்தன்மையுடையவள் நீ

உன் புன்னகை யார்பக்கம் என்பதையே
பார்த்துக்கொண்டிருக்கும்
என் மிருகக்காதலின்
ஆண் தேவதை இறகுகளை
கத்தரிக்கும் உன் மோனங்களால்
வேவு பார்க்கிறாய்
கொஞ்சம் கூட இரக்கமே இல்லாமல்

பிணக்கக்காரன்தன் பிணியில்
பிரியநினைக்கும்
உன் அருகாமைகளை
பரிசோதிக்கும் கடைக்கட்டமாக
போயிடுவேன்டீ என்றுசொல்லும்
அம்மூன்றாம் முறையிலும்
முடிந்தால் போடா டேய்
என்று சொல்லி
என் இடக்குநாட்டான் கர்வங்களை
சுக்குநூறாக்கிவிடும் அடங்காப்பிடாரி நீ

எதற்கும் சங்கிலியிட்டு
அடைத்துவிட விரும்பா என்னின்
தொட்டால் சிணுங்கித் தனம்மட்டும்
ஏனோ மாறாமலேயே
விட்டு விட்டு நடிக்கிறது
உன் முன்னால்
எனைப்பற்றி எல்லாமறிந்தவள்
என்னும் திமிர்
உனக்குமட்டுமே இருக்கிறது என்றதாலா ??

என் பிதற்றல்களை ஆற ரசித்து
பித்துப்பிடித்த நிலைக்கு ஏற்றிவிட்டு
கடைசியாக வந்து
என் வர்ணனைகளால்
உன் புறமுதுகுமேட்டில்
கொடிகளாகி வளர்ந்த
அம்மயிலிறகுகாட்டின்
ஒற்றை இறகு பறித்து
என் கண்களைத் தழுவி
உறங்குடா ராஜா மணியாகிட்டு
என்று சொல்லும்போது
மீண்டும் அந்த கொஞ்சல் எப்பொழுது தருவாய் நீ
என்பதைப்போலே
உனை தேடவைத்து
சென்றுவிடும்
மோடிமஸ்த்தான் வித்தையை
எங்கிருந்துதான் கற்றாயோ ஹாஹ் ஹாஹ் ஹாஹ்

என் பிழைகளை நீ அறிந்தால்
எனை நேசிப்பதை
நிறுத்திவிடுவாயோ என்ற
குறுகிய மனப்பான்மையால்தானே
உன் முதன்முதல் தேடல்களின்போது நான்
ஓடி ஒளியலானேன் கண்ணம்மா
இவையெல்லாம்
உனை அடைந்துவிட்டால் சரியாகிவிடுமா

ஆனால் இதோ இன்றெல்லாம்
என் நினைவுகளில்
உன் படுக்கையறை
நிலைக்கண்ணாடியில் ஆழப்பதிந்துவிட்ட
நீ உதிரவிழையும்
என் அழகான அணைப்புகளிலிருந்து
சுவடுகளே அற்றாமல்
உனை பறித்துக்கொண்டுபோகத் துடிக்கும்
ஓர் ஆக்ரோஷ மிருகம்
எனக்குள்ளே வளர்ந்துகொண்டிருக்கிறது

அது கக்குகின்ற அக்கினிக் கொழுந்தில்
க்ஷணந்தோறும் நடக்கின்ற
என் அனுமரணம்
பல கதவுகள் தட்டிப்போகும்
உன் மடிதேடி,,,,,,,,

பல கதவுகள் தட்டிப்போகும் உன் மடிதேடி,,,,,,,

அனுசரன்

எழுதியவர் : அனுசரன் (20-Sep-14, 5:28 am)
பார்வை : 161

மேலே