கற்பனையின் வித்தை

வெறுங் கற்பனையின்
வித்தையேன்ன தெரியுமா ?
காற்றைவிட அதிகமந்த
கற்பனையின் வேகம் !

நில்லென்று சொல்லுமுன்னே
நெடுந்தூரம் சென்று நிற்கும் !
வானத்தின் அடுத்த பக்கம்
வரித்தாளில் வரைந்துகாட்டும் !

மரத்துக்கும் சிறகு பூட்டி
மலைகளைச் சுற்றிக்காட்டும் !
மழைத்துளி அடுக்கிவைத்து
மாளிகை எழ வைக்கும் !

சிலுசிலுக்கும் நதியோலியை
சிரிப்புக்கு இனையாக்கும் !
செம்பிழம்பு ஆதவனைச்
செந்தூரப் பொட்டாக்கும் !

வான் மிதக்கும் கோள்களை
வாசலுக்குப் புள்ளியாக்கும் !
தேயாத கொள்தன்னை
தேய்கின்ற நிலவாக்கும் !

கார்மேகக் கூட்டமதை
கன்னியரின் குழலாக்கும் !
அடுப்பெரியும் தகதகப்பை
அழகான கவியாக்கும் !

வண்ணம்தான் காகிதப்பூ
வாசத்தை அதில் சேர்க்கும் !
காணாத தேவதையை
காதலியின் முகம்காட்டும் !

வெற்று மணல் தரையிலே
வெள்ளை மலர் விளைக்கும் !
வெண்பனிச் சிகரமதை
வெள்ளிப் பாறையாக்கும் !

பறக்கும் மேகமதை
பஞ்சுக் கூரையாக்கும் !
புறாக் குஞ்சுகளைப்
பொன்முட்டை இட வைக்கும் !

புலிக் கூட்டத்துடன்
பூனைகளை நட்பு வைக்கும் !
ஊதாப்பூ அடுக்கிவைத்து
ஊசியிலே சிலை செதுக்கும் !

மாதக் கடைசியிலும்
மனம் பீறி ஊற்றெடுக்கும் !
எழுதி ரசித்திருக்க
என்னையும் கவிஞனாக்கும் !

எழுதியவர் : மீ.மணிகண்டன் (21-Sep-14, 1:33 am)
பார்வை : 120

மேலே