பயனற்றவன் என உணர்ந்தேன்

இரவின் வரவால் உறையும் நீர்போல்
உந்தன் வரவால் உறைந்தேன்!
உதயன் கண்டால் உருகும் பனிபோல்
உன்னை கண்டால் வியர்த்தேன்!

கடலில் திசையை காட்டும் ஒளிபோல்
அருகில் வரவர துடித்தேன்!
காற்றின் விசையால் மிதக்கும் இலைபோல்
சிரிப்பின் விசையால் மிதந்தேன்!

துணிச்சல் கொண்டு காதல் சொல்ல
முகத்தில் எச்சல் உமிழ்ந்தாய்!
பதில்சொல் கேட்க "என்னுடன் வாழ
தகுதி இல்லை" என இகழ்ந்தாய்!

"அமெரிக்க வேலை, பெனாரஸ் சேலை,
மனை பின் சோலை, பிடி என் காலை!
வங்கியில் கோடி, ஊர்சுற்ற ஆடி,
வாயில் சிகார், கையில் கிடார்!"

ஒப்பற்ற ஞானத்தை உன்னிடம் கற்றபின்
பயனற்றவன் என உணர்ந்தேன் - காதல்
அருகதை இல்லையென அறிந்தேன்!

திக்கற்ற வாழ்க்கைக்கு திசை காட்டினாய்,
என்ணத்தை சாதிக்க விசை ஊட்டினாய்!

எழுதியவர் : ராஜராஜசோழன் (22-Sep-14, 10:43 am)
சேர்த்தது : ராஜராஜசோழன்
பார்வை : 439

மேலே