தனிமை

காலனவன் வரவில்லை
கன்னி மனம் தூங்கவில்லை
வாழ்ந்திருக்க ஆசையில்லை
வாழவைக்க யாருமில்லை
என்றுதான் தணியும் .....?

ஏகாந்தம் துணையிருக்க
ஏக்கம் குடியிருக்க
ஆணவம் படர்ந்திருக்க
ஆத்திரம் கணை தொடுக்க
என்றுதான் தணியும்.....?

பால்ங்கிணறு திறந்திருக்க
அடைப்புகள் நகர்ந்திருக்க
மரணம் அழைத்திருக்க
மேனி நடித்திருக்க
என்றுதான் தணியும்.....?

வெய்யில் சுட்டெரிக்க
புடைவை தொட்டனைக்க
தண்ணியில்லா காட்டில்
தன்னந்தனியாய் நானிருக்க
என்றுதான் தணியும்.....?

ஓலைக்குடிசை இருக்க
ஒத்தப்பாய் சுருண்டிருக்க
பழைய பானை இரண்டிருக்க
இடிந்த ஓர் அடுப்பிருக்க
என்றுதான் தணியும்.....?

விறகொடிக்க நான் செல்ல
தொட்டுத்தூக்கி தலையில் வைக்க
யாருமில்லை என்செய்ய
என்றுதான் தணியும்.....?

சுடுமண்ணில் கைவைத்து
வள்ளிக்கிழங்கு ஒன்று நான் தேடி
பவ்வியமாய் மடியில் கட்டி
கூட்டி வந்தேன் சமையலுக்கு
என்றுதான் தணியும்.....?

நான்
தனிமைக்கு
தத்துப்பிள்ளை....
ரணங்களின்
ரகசிய தோழி....

எழுதியவர் : ம.கலையரசி (22-Sep-14, 12:23 pm)
Tanglish : thanimai
பார்வை : 118

மேலே