சூடான பால் சுட்டுவிடதான் செய்கிறது
இரவெல்லாம் இணையதளத்தில் ஊர்வலம்
காலை ஏழு மணிவரை தூக்கம்
நீலவண்ண சுடிதாருக்கு
தேடி பிடித்து அலங்காரம்
இதுவா அதுவா எதுதான்
பொருத்தம் பல சந்தேகம்
கல்லூரி பேருந்து பயணம்
நேற்று நடந்ததும்
இன்று நடக்க போவதும்
சுவையான பட்டிமன்ற விவாதம்
அவள் உடை அப்படி
இவள் நடை இப்படி
கேலிக்கைகளின் அரங்கேற்றம்
காய்ந்துபோன சப்பாத்தி உதாசினத்தோடு
கேண்டீனில் வயிறு வலிக்கும் சாப்பாடு
அதே தோழிகள்வட்டம்
கண்கள் நனையும் அளவிற்கு
சிரிப்பு நிறைந்த அரட்டைகள்
தமிழ் வகுப்பில் தாத்தாவின் தகராறு
ஆங்கில வகுப்பில் மாடர்ன் அழகியின் ஆர்ப்பாட்டம்
கணித வகுப்பில் அவனோடு கனவுலோகம்
மற்ற வகுப்புகள் கட் அடித்து விளையாட்டு
மாட்டி கொண்டால் மைதானத்தில் மூன்று சுற்று
கால் வலியோடு வீடு திரும்புதல்
எட்டு மணி வரை
தொலைக்காட்சியில் தொலைந்துபோதல்
பிறகு இன்றைய கூத்தின் சிறு விமர்சனம்
செல்போனில் சிலரோடு
பத்து மணிக்கு மீண்டும் இணையதளம்
"இன்னும் நிறைய படிக்கிறது இருக்காம்மா"
சூடான பாலோடு வரும் தாய் - உள்ளத்தை
சுட்டுவிடதான் செய்கிறது
படிப்பறிவில்லா எனது அம்மாவை
ஏமாற்றும் ஒவ்வொருமுறையும்