கொலு
வண்ண வண்ண
நிறங்களிலே
கண்ணைக் கவரும்
விதங்களிலே
ஒற்றைப் படைப்
படிகளிலே
வீற்றிருக்கும்
சிலைகளிலே
சற்று எண்ணிப்
பார்க்கையிலே
முற்றும் உண்மை
உரைத்திடுமே!
நிறங்களில்
எத்தனை வேற்றுமைகள்
வடிவினில்
எத்தனை மாற்றங்கள்
முடிவினில்
அத்தனை பொம்மைகளின்
அடிப்படைத் தன்மை
ஒன்றாகும்.
மரங்கள் விலங்குகள்
அடியினிலே
உருவத்தில் மனிதர்கள்
நடுவினிலே
இறைமையின் பதிவுகள்
உயரத்திலே
படிப்படியாய் விரிந்திடும்
நிலைகளிலே!
உறவினர் நண்பர்கள்
வந்திடுவார்
குழந்தைகள் பாடிக்
களித்திடுவார்
நவதானிய உணவுகள்
உண்டிடுவார்
அன்பில் பரிசில்கள்
தந்திடுவார்.
உணர்ந்து செய்யாச்
சடங்குகளால்
விளைந்து வருவது
ஒன்றுமில்லை
உள்ளம் கரைந்த நிலையில்
வாழ்கின்ற
நாட்கள் எல்லாம் பண்டிகையே!