குடி குடியைக் கெடுக்குமென்று

தாயே,உன்னோட சாவால
தமிழகமே தல கவிழ்ந்திடுச்சே—நீங்க
பெத்த செல்வமெல்லாம்
செத்து மண்ணாகிப் போயிடுச்சே

சனி பகவான் புடிச்சா
துன்பம் ஏழரை ஆண்டுதானே
குடி புடிச்ச கணவனாலே—உங்கக்
காலமெல்லாம் நரகமாச்சே

புருசனோட காசெல்லாம்
பீரு போல தெருவில் சிதற
சோறு தண்ணி இல்லாம--மொத்தமா
சாகத்தான் துணிந்தீர்களோ

மண்ணெண்ண எடுக்கையிலே
மனசு வந்துத் தடுக்கலையா
தீ வச்சு கொளுத்தையிலே—உங்க
தசை கூட ஆடலயா

ஏழையாப் பொறந்ததாலே
கருவிலேயும் கலையாம—பெண்
சிசுவாய்ப் பிறந்தும் இறக்காம
முடிவில் இப்படி கருகி சாகலாமோ

என்னத்த எழுதி
என்னத்த நான் சொல்ல
எல்லோரும் புரிஞ்சுக்கணும்
குடி குடியைக் கெடுக்குமென்று.

(கணவனின் குடிப்பழக்கத்தால் அழிந்த
ஒரு குடும்பத்தின் நினைவாக)

எழுதியவர் : கோ.கணபதி (25-Sep-14, 8:16 am)
பார்வை : 77

மேலே