மீண்டும் காதலிப்பேன்
என்னுள்
உணர்வுகள்
அரும்பத் தொடங்கிய
நாளிலிருந்து
உந்தன் கொலுசொலியில்
சங்கீதம்
சங்கமிக்க கண்டேன்..
மீசை
முளைப்பதற்குள்ளாகவே
உன்னை பற்றிய
ஆசை
என்னுள் விளைந்துகிடந்தது..
ஆயிரம்முறை
என்கால்கள் உன்னை
கடந்து நடந்திருக்கும்..
என்
இதயம் மட்டும்
உன்னை கடந்த
இடத்தில் கிடந்தது
துடித்திருக்கும் ..
பதின்பருவத்து
நாட்களில்
என்னுலகத்தில் நீ
மட்டும் தான் அழகி ..
என் கனவுகள்
முழுமையும் உன்னை
பற்றிய முனுவலில்
நீண்டு கிடக்கும் ..
இன்றும் அப்படித்தான் ..
என்
இதயப்பள்ளத்தாக்கில்
உன்மொழி மட்டும்தான்
அருவியாய்
கொட்டும்..
உன்னை
பற்றிய நினைவுகள்
மட்டுமே
என்னைப்பற்றிய
நிகழ்வுகள்..
என்
ஜன்னலின் வழியே
வெற்று வானத்தை
உற்று நோக்கையில்
இந்த
பிரபஞ்ச எல்லையில்
ஓர் உலகம்
தனித்து இருப்பதாக
உணர கண்டேன்.
அங்கே
இருவர் மட்டுமே
இருப்பதாக இழையோடிய
என்
நினைவலைகளை
சற்று நிறுத்தி
உற்று பார்த்தேன்.
ஒருவர்
நானாக இருக்கையில்
இன்னொரு நாணலை
கண்டேன்.
அது
வேறுயாருமல்ல ;
ஒற்றைச்சொல்
உலக அதிசயம்
“ நீ “
இப்படியே
பூட்டிய இரும்பு
பெட்டியை போல
சத்தமில்லாமல்
உன்னில் முத்தம்
அள்ளாமல்
என்
காதலை வளர்த்தேன்.
நாகரீகம்
பண்பாடு
மரபு
மொத்தத்தில்
உன்னிடம் சொல்லாத
என் காதல்.
நான்
கடந்து வந்த
பாதையில்
ஒற்றை நினைவு
மட்டுமே
நீண்டு வந்திருக்கும்.
அது
உந்தன் நினைவாக
மட்டுமே மீண்டு
வந்திருக்கும்.
நேற்று
ஒருத்தியை கண்டு
இன்று
காகிதத்தில் காதலை
நிரப்பிக் கொண்டு
அவளிடம் செல்பவர்கள்
சற்று திரும்பி
என்னை உற்றுகையில்
அதிசயமாகத்தான்
தோன்றும்..
ஏனெனில்
என் ஒருத்தி
ஒரு “தீ”
என்பதால் ...
இப்படி
இறுமாப்போடு வளர்ந்த
என் காதலில்
இடி விழக்கண்டேன்.
ஆம் ;
சொல்லாத என்
காதலை
அன்று யாரும்
இல்லாத
தருணத்தில் அவிழ்த்து
விட்டேன் அவளிடம்..
உதட்டுச்
சாயங்களை தாண்டி
அவளுக்கொரு உள்ளம்
இருக்கும் என் நம்பிக்கையில் ..
அவள்
என் காதலை
ஏற்றுக்கொள்ளவில்லை
நானும்
எதிர்பார்க்கவில்லை.
இமயம்
நிகர்த்த பனிச்
சரிவுகளில்
சூடு பரப்ப
அவளிடம் முத்தம்
கேட்டதில்லை ..
கொட்டும் மழையில்
நனைகையில்
இடைவெளி எதற்கென
அவளை கட்டியும்
கொண்டதில்லை..
கல்லூரி நாட்களில்
இளந்தென்றல் வீசுகையில்
காலாற அவள்
கைபிடித்ததும்
நடந்ததில்லை ..
இத்தனைக்கும்
மொத்தமாய் என் காதலை
சுமந்து வந்திருக்கிறேன்
பத்தரை திங்கள்
நித்திரை தொலைத்து
கத்திரி வெய்யிலில்
கால் பதித்து
கொட்டும் மழையில்
கொட்டகைகள் களைந்து
அன்பை மட்டுமே
சுமக்கும் தாயென ...
எப்படி யுணராமல்
போயிருப்பாள் ..
பகல் சூரியனில்
நிலவு தெரிவதில்லை
என்பதால் நிலவே
இல்லை
என்பதர்த்தமா ?
மவுனம்
காத்து நடக்கையில்
அவள் மனம்
பற்றிய பிரக்ஞை
என்னுள் எழுந்தபோது
உண்மையொன்றை அறிந்தேன்.
அவள்
முன்னமே காதல்
கொண்டிருக்கிறாள்
வேறு ஒருவனிடம் ..
என்னிடம்
மறைத்து விட்டாள்
அவள் காதலை ;
மறுத்து விட்டாள்
என் காதலை ;
நான்
அவளை காதலித்து
நிஜம்;
காதலிப்பது
நிஜம் ;
அவளால்
நான் காதலிக்கப்படவில்லை
என்பதற்காக
நான் அவளை
காதலித்தது
பொய்யாகிவிட போவதில்லை..
என் காதலும்
பொய்யல்ல ..
மீண்டு வந்து விட்டேன்
மீண்டும் காதலிப்பேன் ;