+வாடா போடா நண்பர்கள்+

முதல்வகுப்பு நினைவுவந்து முகத்தைமுட்டி நிற்கும்வேளை
கதகதப்பாய் இருக்குதடா இதயம் - அதுகொடுத்த
இன்பமெல்லாம் ஆயுள்வரை தேன்போல இனிக்குமடா
மீண்டுமெப்போ கிடைக்குமடா அதுவும்!
புத்தம்புது நட்புபூக்கள் புதுப்புதுவாய் பூத்தவுடன்
தித்திப்புடன் சத்தமிட்டு திரிந்தோம் - அத்தருணம்
இனியெப்போ என்றெண்ணி இமைமூடி யோசித்தால்
பனிமழையாய் பொழியுதடா கண்கள்!
பள்ளிக்குள்ளே துள்ளிடுவோம் பல்லாங்குழி ஆடிடுவோம்
தள்ளிவைத்தோம் துக்கங்களை தூரம் - அள்ளியள்ளி
வள்ளல்போல அன்புமிக வழங்கியதே நட்புக்கூட்டம்
மல்லிபோல மணக்குதடா இன்றும்!
படித்ததென்ன மறந்துவிட்டோம் பாசம்மட்டும் மறக்கலையே
பிடித்ததுவே அப்பள்ளி பயணம் - அடிக்கடி
அந்த நினைவுகளை அசைபோட்டு பார்த்திருப்போம்
அந்நாட்கள் பொன்நாட்கள் தானே!
வாடாபோடா நண்பர்களை வாழும்மட்டும் நினைத்திருப்போம்
வாடாது நட்புபூக்கள் வாழ்வில் - தேடுகின்றேன்
சிறுவயதின் சிரிப்பு தந்த நிம்மதியை
யாரும்கண்டால் பகிர்ந்திடுவீர் எனக்கு!