ஆடு மேய்க்க போகயிலே
![](https://eluthu.com/images/loading.gif)
சூரியன் உதிச்சதும் புறப்படுவோம்
எனது தோழியும் நானும்
எங்களைவிட அதிக
நேசத்தோடு ஒன்றாகிவிடும் இருவரின்
ஆட்டு மந்தையோடு சேர்ந்து
இன்றைய நாளின் தொடக்கம்
வயசான
கோபக்கார பாட்டி தோட்டத்து
மல்லி பூத்து இருக்கும்
குளிச்சி குதிச்சி ஆட்டம் போட
கவுண்டர் நிலத்தில்
கல் பதிச்ச கிணறு இருக்கும்
எட்டி பார்க்க வந்த
கருப்பு ஆட்டுக்கு காலம் முழுக்க
ஊரில் கெட்ட பேர் இருக்கும்
கொம்பாடு ரெண்டு
வேலி தாண்டி ஓடி இருக்கும்
அதை துரத்தி துரத்தியே
காலெல்லாம் வலிக்கும்
கடிச்சி ருசிக்க பெரிய
மீசைகாரர் வீட்டு மரத்தில்
கொய்யா, மாங்கா காய்ச்சி இருக்கும்
முறைமாமனிடம்
ஜெயிக்க முடியாத
மைனரின் வம்பு இருக்கும்
தாகத்தை தணிக்க
செட்டியார் தோப்பு
தென்னை இருக்கும்
மதியத்துக்கு அசந்து உட்கார
ஒத்த வேப்பமர நிழல் இருக்கும்
வலியோடு சத்தமிட்டு
புதருக்கு ஒரு செனையாடு
ஒதிங்கி இருக்கும்
ஆற்றில் தண்ணீர் இருக்கும்
தாவணியில் பிடிக்க மீன் இருக்கும்
ஆற்றோர வரப்பில்
வெள்ளி காசாய்
காளான் முளைச்சிருக்கும்
பொழுது சாய நினைப்பெல்லாம்
அவரு மேல இருக்கும்
வீடு திரும்பும் போது............
தலையில் தொடுத்த பூ இருக்கும்
தலைக்கு மேல் விறகும், புல்லும்
சேர்ந்த கட்டு இருக்கும்
அதுக்குள்ளே மக்காசோளமும், கடலைசெடியும்
உறங்கி இருக்கும்
மடியிலே மொட்டு காளான் இருக்கும்
தூக்கு சட்டியில் மீன் இருக்கும்
கையில் அன்று ஈன்ற ஆட்டுகுட்டி இருக்கும்
வீட்டுக்கு போன பிறகு தான் தெரியும்
குறும்பாடு ஒன்னு தொலைஞ்சிருக்கும்