நீயில்லாது நிழலாய் வாழ்கிறேன்-வித்யா
நீயில்லாது நிழலாய் வாழ்கிறேன்......!-வித்யா
என்னுயிரே.....
அங்கு...
கடலுக்கு நடுவே கப்பலில்
நீமிதந்துக் கொண்டிருக்கிறாயா நீ....?
இங்கு
உன் நினைவுகளில்
மூழ்கிக்கொண்டிருக்கிறேன் நான் ......!!
நீ எனை
நீங்கிக் கடக்கும் தூரம் யாவும்
வெற்றிடமாகவே நீள்கிறது............!!
நீ இல்லாது
நான் வாழும் இப்புவிப்பரப்பு
இளைத்து எழும்பும் தோலுமாய்
காட்சியளிக்கிறது......................!!
நாம் கால் பதித்த
பயணங்களெல்லாம்
என் தனிமையை
வெறுக்கின்றன......
உன் அருகாமையை
விரும்புகின்றன.....!!
தனிமைப்படுத்தப்பட்ட
எனதிதயம்
கூட்டத்திற்குள்ளும்
குமுறுகிறது........!!
இன்று
அலைபேசியில் உன் குரல்
உதடுகள் ஊமையாகி
கண்ணீரால் பேசினேன்.........
அடை மழையிலோ
பெரும் சூறாவளியிலோ
பிறர் செவி துளைக்கா
நம் கதறல் உயிர்வாங்கிடும்
வலி கொடுக்கும்..............!!
என் கண்கள்
மெளனமாக அழுத போது
யாருமில்லையென இணைப்பை
நீ துண்டித்த போதும் .......
பேச சக்தி இல்லாது
இருந்துவிட்டேன்........!!
ஒரு தண்ணீர் தடத்தில்
உன்னைப் பின் தொடருகிறேன்
உன் சுவடுகள் என் இதயத்திற்கு
மட்டுமே புலப்படுகின்றன.........!!
எனை ராணி மாதிரி வைத்துக் கொள்ளவா
நீ பாலைநிலத் தலைவன் போல
பொருள் ஈட்டச் சென்றாய்........
நீ என் முடிசூடா மன்னனான பிறகு
பட்டத்து ராணியாக
எனக்கு நானே முடிசூடிக்கொண்டேன்
பொருளேதும் வேண்டாம்................................!!
போதும் வந்துவிடடா
கடல்தாண்டி
என் காதலா ......
என் ஆற்றாமை நோய்க்கு
அருமருந்தே நீதானடா..........!!