பெண்ணே நீ
பெண்ணே…..நீ
பாவலர் கருமலைத்தமிழாழன்
குளிர்நிலவே எனப்புகழும்
குயில்மொழிக்கு மயங்காதே
குளிரெரிக்கப் புறப்பட்ட
குங்குமத்தின் தீக்கதிர்நீ !
மானென்னும் புகழ்மொழியால்
மண்ணிலுயிர் துறக்காதே
தேனுண்ணும் நரிகள்தம்
தோலுரிக்கும் பாய்புலிநீ !
கயலென்னும் புகழ்மொழியால்
கலங்கிவலை துடிக்காதே
புயலாகி வலையறுக்கப்
புறப்பட்ட திமிங்கிலம்நீ !
கற்பென்னும் பெருமைக்குக்
கல்தன்னை அணைக்காதே
விற்பனையின் பொருள்மாற்ற
வெடிக்கின்ற கந்தகம்நீ !
படிதாண்டாப் பத்தினியாய்ப்
படிக்குள்ளே கருகாதே
படிசமைக்கும் ஓநாயைப்
பதைக்கவைக்கும் தீச்சுடர்நீ !
தாய்மைக்கு வித்தென்னும்
தவிப்பினிலே புதையாதே
பேய்மைக்கு மண்பிளக்கும்
பிரளயத்தின் விருட்சம்நீ !