குளிர்பதனச் சிறைக்கூடம்
குளிர்பதனச் சிறைக்கூடம்
பாவலர் கருமலைத்தமிழாழன்
பெற்றெடுத்த குழந்தைக்கோ ஆசை தீரப்
பெருகிவரும் பால்கொடுக்க முடிய வில்லை
சற்றேஎன் மடிவைத்துக் கொஞ்சி நெஞ்சில்
சந்தனத்தை அணைப்பதற்கும் நேர மில்லை
பற்றியகை கணவனுடன் குடும்பம் பற்றிப்
பாசமுடன் பேசுதற்கும் இயல வில்லை
சுற்றத்தார் தேடிவந்தும் அன்பாய்ப் பேசிச்
சூழ்ந்தமர்ந்து மனம்நெகிழ ஓய்வே இல்லை !
சுடுகின்ற மாமியாரின் சொல்லால் நெஞ்சு
சுட்டெரிய வழிகின்ற கண்ணீர் கண்டு
படுக்கையறை ஒத்தடமாய்க் கணவன் செய்யும்
பரிவுதனை அனுபவிக்கும் பேறு இல்லை
கொடும்பழியைப் போடுகின்ற நாத்தி மாரைக்
கோபமுடன் திட்டியெதிர் சண்டை யிட்டுக்
கடுகடுத்த முகம்மலர சமர சத்தில்
கலந்துவரும் மகிழ்ச்சிக்கு வழியு மில்லை !
விடிவதற்கு முன்னெழுந்து வீட்டு வேலை
விரைவாக முடிக்குமுன்னே காலம் ஓடக்
கடிவாளக் குதிரையாகக் கடமை செய்யக்
கணவனுடன் அலுவலகப் படிக ளேறி
நடிக்கின்ற நாகரிகப் பெண்ணாய் மாறி
நாளெல்லாம் எந்திரமாய்ச் சக்கை யாகும்
குடித்தனமோ குளிர்பதனச் சிறையின் கூடம்
குமுறுதற்கும் பொழுதில்லா நகர வாழ்க்கை