மானிட வாழ்ந்து பார் ஒரு நாள் நீ நீயாக .............

மானிடனே
நீ ஒரு நாள் வாழ்ந்து பார்
உன் உள்ளம் போல்
ஒரு நாள் வாழ்ந்து பார்
உன் முகமூடிக்கு
ஒரு நாள் ஓய்வு கொடுத்து பார்
நீ உன்னை அறிவதற்குள்
உலகம் உன்னை அறிந்து விடும்.

ஆயிரம் உள்ளத்தின் கண்ணீரில்
ஒருவனுக்கு கருணை காட்டி
நூறு உள்ளத்தின் பாராட்டு பெற்று
வையகத்தில் நீயுமொரு கொடைவள்ளல்.

நீதியிலும் மாற்றமில்லை
நீதி ஏட்டிலும் மாற்றமில்லை
தண்டனைகளிலும் மாற்றமில்லை
குறுக்கே பணம் என்னும் பிணம்
சபையில் புகுந்துவிட்டால்
வக்கீலின் பேச்சில் உண்மை தெரியும்
குற்றவாளி மாலையுடன்
கம்பீரத்துடன் உலா வருகின்றான்
நீதி தேவதையின் கண்கள்
மறைக்கப்பட்டிருப்பதே மிக நன்றே.

பாலியல் புகாரில் உள் சென்றவன்
மகளீர் தின சிறப்பு விருந்தினர்
சிறுவர் துஷ்பிரயோகம்
கட்டுரை வரைகிறாள் ஓர் மங்கை
அவள் வீட்டு சமையல் அறையில்
பாத்திரம் பள பள வென மின்னுகின்றது
ஏழைச் சிறுமியின் கண்ணீரால்.

ஆலய விளம்பர பலகை பேசுகின்றது
இன்றைய அன்னதான உபயகாரர்
திரு . செல்வந்தர் கூடவே ஒலிபெருக்கி வேறு
அவர் வீட்டு கதவின் திருவாசகம்
"நாய் கடிக்கும் கவனம் "

மானிட வாழ்ந்து பார் ஒரு நாள் நீ நீயாக .............
போற்றாத வையகம் சில வேளை போற்றும்
போற்றிய வையகம் உன்னை தூற்றும்
இரண்டிலும் தலை நிமிர்ந்து வாழுபவனே
நவீன அரசியல் வாதி.

எழுதியவர் : அன்புடன் விஜய் (30-Mar-11, 3:59 pm)
சேர்த்தது : vijeyananth
பார்வை : 693

மேலே