எல்லை மீறும் உன்னழகு
நீ சிரிக்கும் போதிலலை
. நீர்ச் சுனையில் வெள்ளி நிலா
. நின்றுமிளிர் துள்ளல் காண்கிறேன்
பூ விரித்த சோலைதனில்
. புள்ளினங்கள் . போடுமொலி
. புல்லரிப்பில் இன்பங்காண்கிறேன்
ஆ.எரிந்து கொள்ளும்சினம்
. அத்தனையும் நீர்ச்சிதறல்
. ஆகிவிடப் புன்னகைக் கிறேன்
தீவிரித்தே முன்னெரியத்
. தேகம் குளிர் காய்வதெனத்.
. தேவி உந்தன்முன் சுகிக்கிறேன்
மாவிரித்த கிளையிடையில்
. . மங்கு மந்திவேளை தனில்
. மாங்குயில்கள் இரண்டுகாண்கிறேன்
பூசொரிந்த தேனையுண்ட
போதையெழக் கூடுகையில்
பாவையுனை எண்ணி வாடினேன்
தேவரிந்தத் தேனழகைத்
. தேவதையைக் கண்டுவிட்டால்
. தேவலோகம் பூமிவருங் காண்
கோபுரியும் ஆட்சி யென்ன
. கோலெடுத்த ஆண்டிதனும்
. கூடியிரந் தாடுவர் முன்னால்
நாவரையும் வார்த்தையென்ன
. நாள் விரியும், காட்சியென்ன
. நீசிரித்த பேரழகே மேல்
பாவரிக்கும் உள்ளடங்காப்
. பாவையுந்தன் அழகின்நிகர்
. பார் உதிக்கும் வானின் சுடர்தான்
காவிரிக்கும் கங்கைநதி
. காணுகின்ற மென் நெளிவு
. கால் நடக்கும் உன்னசைவே, நான்
நீவிரிக்கும் விழியிடையே
. தீஎரிக்கும் ஐம்புலன்கள்
. நேரெதிர்த்துத் தோல்வி கண்டதேன்?
வான்விரித்த மேகம்வரும்
. வாழுமுந்தன் மென்மையின்முன்
. வாழ்விழக்க நிர்மலவானம்
மான் திரியும் மாவனமுள்
. மாமலையின் கூர்முகமும்
. மங்கியதுன் கூர்விழி கண்டோ
ஏன்சரியும் வானடியும்
. ஏந்திழையுன் கார்குழலில்
. எண்ணமெழப் பூமி தொட்டதோ
ஊனெரியும் காடுதனில்
. உள்ளமதை வைத்தெரிக்கும்
. ஓர்நிலையைத் தந்துவிடாதே
தேன்சொரியும் பூக்களிலே
. தேவையென்ன வென்றது யார்
. தேம்பியழப் பூக்கள் வீழ்வதேன்
மீன்பிரிந்தே நீரைவிட்டு
. மெல்லதுடித் தாடுவதென்
. மென்விழியின் துள்ளல் வெல்லவோ
மேன் புரியின் இராச்சியத்தில்
. மேடுகண்ட பொற்குவியல்
. மின்னவில்லைச் சென்றுவந்தாயோ
கோன் முடியைத் தொட்டதில்லை
. கோலம்கெட்டு வாழுகிறான்
. கொண்ட பகை உன் விழிவாளோ