என்னவளுக்காக ஒர் எழுத்தாணி

இரும்புக் காய்ச்சல்(ஐ)
காதுக்குள்
தான் புகுத்தும்
வகுப்பறை பாடம்
வழியப் போய்
நான் கேட்கும்
வேதனைத் தருணம் விளக்குகிறது,
இன்றைய இரவின்
கண்ணீர் காட்சிக்கு
ஒளிப்பதிவும் ஒப்பனைகளும்
இறுதி நிலை எட்டியதை...

உனைக் காணாது
இருப்பேன் என்று
இரும்பு பூட்டுக்குள்
சிறை வைத்தும்,
கண்ணிமைகளின் கையூட்டால்
CONDITIONAL BAIL லிலே
கச்சிதமாய் வெளிவருகிறது
கவனிப்பாரற்ற என்
கண்ணாடி இதயம்...

கழுத்தின் வளைவுதீண்டி
கருநிற SHAWL கண்சிமிட்ட,
குலுங்கிய SHAWL சுருக்கில்
என் இதயம்
இயற்கை எய்தியதை
கண்டுகொண்டே
நான் நடந்தேன்
கருங்கூந்தல் காட்டாற்றில்
களவாடப்பட்ட நடைபிணமாய்...

வருசநாட்டு வாடைக் காற்றில்
வேதனையில் வாய்குழறும்
வழக்கொழிந்த வாய் மெட்டுகளில்
வழியப் போய்
நான் விதைக்கிறேன்
களவுற்ற கண் விருட்சங்களின்
கண்ணீர் விதைகளை..

ஆடை ,
உயரம்,
அளவுப் பேச்சு,
கண்மறைக்கும்
கொடும்பாவச் சிசுவாய்
கண்ணாடி,
இமைஅசைவின் தென்றல் வீச்சு,
சுவாசத்தின் சலங்கையொலி என்று
காணும் பெண்ணினத்தில்
உனைமட்டுமே தேடி
ஓய்ந்தே போகிறேன்...

"தாய்ப்பாசம் மிக்கவள்"
என்று செவியறியும்
தருணமெல்லாம்
என் ஒருதலை ராகத்தின்
பாடுபொருள் பெருமை கண்டு
கைகளும் உயர்த்துகின்றன
'சட்டை COLLAR' களை

மடியாத மழலைக்கு
நிலாகாட்டி சோறுட்டும்
தாய்மனம் போல்,
உன்னை சேராமல்
செத்துப் போகும்
என் பச்சிளம்
கவிதை வரிகளுக்கு
"நீ படிப்பாய்" என்று
பொய் கூறியே
மெய் உருவினுள்
உயிரேற்றுகிறேன்..

தாய்க்கும்,தங்கைக்கும்
மிருகமுகம் மட்டுமே
காட்ட பழகிய என் முகத்திரையை
கிழித்தெறிந்த நீ
தற்செயலோ,உந்துவிசையோ?!!!

எதுவாயினும் சரி..!

உனக்கான என்
மனக்கணத்தை
மடிசுமக்கும் கவிப்பிஞ்சுகளை
என்றுமே உச்சிமுகரும்
என் எழுத்தாணியின் தாய்மனம்..-JK

எழுதியவர் : (10-Oct-14, 6:26 pm)
பார்வை : 75

மேலே