வானம் நோக்கி
நீ வருவாயென்ற
நம்பிக்கையில்
பஞ்சநதியேதும் பாயாது
கொளுத்துமெனது
கோடை நிலத்தில்
ஒரு பொட்ட ளவும்
சேதாரமின்றி
சேமித்து வைத்திருந்த
பொக்கிஷ விதைகளனைத்தையும்
விதைத்து விட்டு
மழையினை வரவழைக்கும்
உபாயம் தெரியாத
ஏழை விவசாயியைப்
போல்
வானம் நோக்கிக்
காத்திருந்தேன் !
நீயோ
ஒரு சிறு தூறலென
பெய்து விட்டு
என் விதை பூமி நனைக்க
விருப்பமின்றி
விருட்டென்று
மறைந்து விட்டாய் !
இடம் பெயர்ந்து
நிலம் மாறும்
திராணியற்று
பாஷையின்றி
காற்றோடு பேசும்
பனையோலையின்
விசும்பல் சத்தங்களினூடே
விதையினை விதைத்தவன்
விரக்தியினை விதைத்து
வாழாவிருக்கிறேன் !
விதைத்த என்
விதைகளனைத்தும்
உன் வரவு நோக்கி
கண் முளைத்து அழுகிறது
கை நீட்டித் தொழுகிறது !
என்ஆவி கலந்து
நான் விதைத்த
வீரியமிக்க
என் விதைகளின்
பிரார்த்தனைக் கேங்கி
விடிய விடியப்
பெய்தென் -
பஞ்ச பூமி
விளைவிப்பாயா ?
அல்லது
மறைந்திருந்து
கருகுமென் விதைகண்டு
களிப்புருவாயா ?