மகப்பேறு மருத்துவர்களின் கனிவான கவனத்துக்கு

மகப்பேறு மருத்துவர்களின் கனிவான கவனத்துக்கு!
ச.ஜெ.ரவி, படங்கள்: தி.விஜய்
''சௌம்யாவுக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கு...''

- கோவையின் அந்தத் தனியார் மருத்துவமனையில் இருந்த தேவேந்திரன் - சௌம்யா தம்பதியின் ஒட்டுமொத்த குடும்பத்தையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது இந்தக் குரல். ஆனால், தொடர்ந்து மருத்துவர்களின் கட்டுப்பாட்டிலேயே வைக்கப்பட்டிருந்த குழந்தைக்குத் திடீரென பார்வை முழுமையாக பறிபோக... ஒட்டுமொத்தக் குடும்பத்தின் மகிழ்ச்சியும் சேர்ந்தே பறிபோனதுதான் சோகம்!

'மருத்துவமனையின் அலட்சியமே குழந்தையின் பார்வை பறிபோகக் காரணம்' என்று புகார் அளிக்கப்பட, வழக்குப் பதிவுசெய்து விசாரணையைத் துவக்கியுள்ளது காவல்துறை.

பொதுவாகவே பிரசவம் சார்ந்து அளிக்கப்படும் சிகிச்சைகள், சமீபகாலமாக அதிக விமர்சனத்துக்கு உள்ளாகி வருகின்றன. 'பரவச அனுபவமாக இருக்கவேண்டிய பிரசவத்தை, கிட்டத்தட்ட நோயாக மாற்றி, காசு பார்க்கும் வேலையை பல மருத்துவமனைகள் செய்துவருகின்றன’ என வெளிப்படையாகவே குற்றச்சாட்டுக்கள் எழத் துவங்கியுள்ளன. குழந்தைக்குப் பார்வை பறிபோன இந்தச் சம்பவம் உட்பட, பல சம்பவங்கள் பிரசவத்தையொட்டி மருத்துவமனையில் மேற்கொள்ளப்படும் சிகிச்சை முறையை கேள்விக்குள்ளாக்கி இருக்கின்றன. 'காசு பிடுங்க இப்படிச் செய்யறாங்க’ என தனியார் மருத்துவமனைகள் மீது புகார்கள் தொடர்கின்றன.



மகப்பேறு காலத்தில் இதைத்தான் சாப்பிட வேண்டும், இதைத்தான் செய்ய வேண்டும் என உணவு முறை, வாழ்க்கை முறை மற்றும் சிந்தனை என அனைத்திலும், தாயாகும் பெண்ணுக்கு ஏராளமான ஆலோசனைகள் மருத்துவத் தரப்பில் வழங்கப்படுகின்றன. ஆனால், மகப்பேறு மருத்துவத்தில் மருத்துவர்கள், செவிலியர்களின் பணி குறித்து எல்லா மருத்துவமனைகளிலும் தெளிவுபடுத்தப்படுகிறதா... மகப்பேறு மருத்துவத்தில் என்ன மாதிரி சிகிச்சைகள் வழங்க வேண்டும், சரியான சிகிச்சைதான் வழங்கப்படுகிறது என்பதை எவ்வாறு உறுதிப்படுத்துவது போன்ற சந்தேகங்களுடன் மகப்பேறு மருத்துவ நிபுணரும், கோவை, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வருமான டாக்டர் ரேவதியைச் சந்தித்தோம்.

''பிரசவத்தின்போது தாயோ, சேயோ உயிரிழக்கக் கூடாது என்பதில் மட்டுமல்ல... குழந்தை உடல் ரீதியாகவோ, தாய் மன ரீதியாகவோ எந்த பாதிப்புக்கும் ஆளாகக்கூடாது என்பதிலும் மருத்துவர்களும், செவிலியர்களும் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். ஒவ்வொரு பெண்ணும், அவள் வீட்டுக்கு எவ்வளவு முக்கியமானவள் என்பது புரிந்து, பிரசவங்களைப் பொறுப்புடன் மருத்துவர்கள் கையாள வேண்டும். பிரசவப் பொழுதுகளில் ஒவ்வொரு நிமிடமும் தாயையும், சேயையும் கண்காணிக்க வேண்டும். குறிப்பாக, தாயின் நாடித்துடிப்பு, குழந்தையின் நாடித்துடிப்பு இரண்டையும் சீரான இடைவெளியில் கணக்கிட வேண்டும்.

பிரசவ கால பரிசோதனைகளை 'பார்ட்டோ கிராம்’ எனும் கிராஃப் சார்ட்டில் குறித்து, சிகிச்சை முன்னேற்றத்தை ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை கண்காணிக்க வேண்டும். ஏதாவது சிக்கல் ஏற்பட்டால் இதில் தெரிந்துவிடும். அபாயம் மற்றும் மிக அபாய காரணிகளாகக் கருதப்படும் ரத்தக்கொதிப்பு இருப்பவர்கள், முதல் குழந்தை சிசேரியன் மூலம் பெற்றவர்கள், ரத்த சோகை உள்ளவர்களை, ஆரம்ப மாதங்களிலேயே கண்டறிய வேண்டும். சிக்கல் அல்லது அபாயம் ஏதும் கண்டறியப்பட்டால், அதற்கு உரிய சிகிச்சைகள் அளிக்கப்பட வேண்டும். அத்தகைய வசதிகள் அந்த மருத்துவமனையில் இல்லைஎன்றால், அனைத்து வசதிகளும் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பிவைக்க வேண்டும், 'நாமளே பார்த்துக்கலாம்’ என ரிஸ்க் எடுக்கக் கூடாது'' என்று அறிவுறுத்திய டாக்டர், செவிலியர்களின் பணிகளையும் பட்டியலிட்டார்.

''போதிய பயிற்சி பெற்ற மருத்துவர்கள்தான், மகப்பேறு சிகிச்சையில் ஈடுபடுத்தப்பட வேண்டும். டிப்ளோமா அல்லது பி.எஸ்ஸி முடித்து, நான்கரை ஆண்டுகள் முறையாகப் பயிற்சி எடுத்தவர்கள் மட்டுமே ஸ்டாஃப் நர்ஸாகப் பணிபுரிய வேண்டும். மிக அபாய காரணி உள்ள நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பயிற்சி இவர்களுக்குத்தான் வழங்கப்பட்டிருக்கும். இவர்களால்தான் நரம்பு ஊசி போடமுடியும், பிறந்த குழந்தையின் உடல்நிலையை கவனித்துக்கொள்ள முடியும். ஆனால், பல தனியார் மருத்துவமனைகளில் இது பின்பற்றப்படுவதில்லை.

குழந்தை பிறந்த முதல் 4 மணி நேரம் மிக முக்கியத்துவம் வாய்ந்தது. பிறந்த 2 மணி நேரத்தில் அதற்குத் தாய்ப்பால் கொடுத்துவிட வேண்டும். 'பேபி ஃப்ரெண்ட்லி இனிஷியேட்டிவ்’ முறையைத்தான் பின்பற்ற வேண்டும். குழந்தையைத் தாயை விட்டுப் பிரிக்கவே கூடாது. சிசேரியன் என்றால்கூட, தாய்க்கு தையல் போடும்போதே பால் கொடுக்க அனுமதிக்கலாம். மயக்க நிலையைத் தாய் கடந்த உடனே தாய்ப்பால் கொடுக்க வேண்டும். பல தனியார் மருத்துவமனைகளில் இது நடப்பதில்லை. சில மருத்துவமனைகளில் 2, 3 நாட்கள் வரை கூட தாயிடம் குழந்தையை அனுமதிப்பதில்லை. இது கண்டிக்கக் கூடிய விஷயம்'' என்றவர்,

''பிரசவத்துக்குப் பின் தாயின் கர்ப்பப்பை ஒழுங்காக சுருங்குகிறதா, அதில் ஏதாவது நோய்த்தொற்று ஏற்பட்டிருக்கிறதா என்பதை கண்காணிக்க வேண்டும். இவை அனைத்தையும் மருத்துவர்கள் வெளிப்படையாகச் செய்ய வேண்டும். சிகிச்சையில் சந்தேகம் ஏதாவது இருந்தால், பெண்ணின் உறவினர்கள், மருத்துவர்களிடம் கேட்டுத் தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டும். ஏனெனில், ஒரு பெண் என்பவள் அந்தக் குடும்பத்துக்கு அத்தனை முக்கியமானவள்!''

- அழுத்தமாக சொன்னார் டாக்டர் ரேவதி.

''பெத்த குழந்தைக்குப் பால்கூட கொடுக்க விடலை!''

தன் குழந்தையின் பார்வை பறிபோக மருத்துவமனை நிர்வாகம்தான் காரணம் என அடித்துச் சொல்கிறார், சௌம்யா. ''போன வருஷம் நான் கர்ப்பமானேன். கோவை, ஆவரம்பாளையத்துல இருக்குற ஐஸ்வர்யா மகளிர் மற்றும் கருத்தரித்தல் மருத்துவமனையிலதான் 'செக்கப்’புக்கு போனோம். குழந்தை நல்லா இருக்கிறதா சொன்னாங்க. இந்த மார்ச் 5-ம் தேதி ஆண் குழந்தை பொறந்துச்சு. 2.74 கிலோ எடையில, குழந்தை நல்ல உடல்நிலையோட இருந்துச்சுனு சொன்னாங்க. ஆனா, குழந்தையைப் பார்க்க அனுமதிக்கல. 'ஹாஸ்பிடல் ரூல்ஸ்படி 3 முதல் 5 நாள் வரைக்கும் குழந்தையை நாங்கதான் கவனிச்சுப்போம்’னு சொன்ன நர்ஸ், தாய்ப்பால் கொடுக்கக்கூட அனுமதிக்கல.

மூணு நாளைக்கு அப்புறம் வீட்டுக்காரரும், அம்மாவும் ரொம்பவே போராடித்தான் குழந்தையைப் பார்த்தாங்க. அப்போ கண் வீங்கி இருந்திருக்கு. ஏன் இப்படி இருக்குனு கேட்டதுக்கு, 'குழந்தையை போட்டோ தெரபியில வெச்சுருக்கறதால இப்படி இருக்குது. பயப்பட வேண்டாம். கண் டாக்டரை வரச்சொல்லி இருக்கோம்’னு சொல்லிஇருக்காங்க. கண் டாக்டர் வந்து செக் பண்ணப்பதான், ரெண்டு கண்ணும் நோய் தொற்றால பாதிக்கப்பட்டது தெரியவந்துச்சு. கை நரம்புல சரியா ஊசி போடாததால கை மணிக்கட்டுல செப்டிக் ஆகி, அது ரத்தத்துல கலந்து கண்ணை பாதிச்சு இருக்குனு டாக்டர்கள் சொன்னாங்க. அப்புறம்தான் தெரிஞ்சுது... எங்க குழந்தைக்கு கண் பார்வை முழுமையா பறி போயிடுச்சுனு!

ஹாஸ்பிடல்ல இருக்கிற நர்ஸ்கள் முழுத் தகுதியோட இல்லை. யாரும் முறையா பயிற்சி எடுத்துக்கிட்ட மாதிரி தெரியல. டாக்டர்கள், போன்லதான் குழந்தையைப் பத்தி விசாரிச்சிருக்காங்க. ரெண்டு நாளா குழந்தையை நேர்ல எந்த டாக்டரும் செக்கப் பண்ணல. பாத்திருந்தா இப்படி நடந்திருக்காது'' என்று அழும் அந்தத் தாய்க்கு ஆறுதல் சொல்ல முடியவில்லை.

இதுதொடர்பாக ஐஸ்வர்யா மருத்துவமனையின் தலைமை மருத்துவர் சந்திரலேகாவை சந்திக்க பலமுறை முயன்றும் பேசமுடியவில்லை. மருத்துவமனை நிர்வாகிகளில் ஒருவரும், சந்திரலேகாவின் கணவருமான வேலுசாமியிடம் இதுதொடர்பாக கேட்டபோது, 'காவல்துறை வழக்குப் பதிவு செய்திருப்பதால், இப்போது பேச முடியாது. வழக்கறிஞருடன் ஆலோசித்துவிட்டு சொல்கிறோம்'' என்று சொன்னார்.


விகடன் User ID கொண்டு Login செய்து, இந்த கட்டுரையை Like பண்ணுங்க, Share பண்ணுங்க, Comment பண்ணுங்க விகடன் வெள்ளியை அள்ளுங்க...

எழுதியவர் : விவரம் அளித்தவர்: முனைவர். (15-Oct-14, 10:16 am)
சேர்த்தது : vasantham52
பார்வை : 213

சிறந்த கட்டுரைகள்

மேலே